vellore cheating news 
க்ரைம்

“எனக்கு பிளட் கேன்சர்.. ஐஏஎஸ் வேற படிக்கணும்.. ” - 70 லட்சத்தை மோசடி செய்த மாணவி.. பரிதாபம் பார்த்து ஏமாளியான பேராசிரியர்!

எனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதால் உயிருக்கு போராடி வருகிறேன் எனவே சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக...

Mahalakshmi Somasundaram

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கலை கல்லூரி  கல்லூரியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை 24 வயதுடைய குணாதேவி என்பவர் கடந்த 2018-21-ம் ஆண்டில் இளங்கலை ஆங்கிலம் படித்துள்ளார்.  அப்போது அந்த துறைத்தலைவரும், பேராசிரியருமான ரூபேஷ் சநீஷ்குமாரிடம், குணாதேவி கல்லூரி படிப்புக்கு பின்னர் இந்திய ஆட்சி பணிக்கு (ஐ.ஏ.எஸ்) படிக்க உள்ளதாகவும். அதற்கு போதிய வசதி இல்லாததால் நிதியுதவி செய்யும்படியும்  கேட்டுள்ளார். இதனால்  ரூபேஷ் சந்திரகுமார் முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் கொடுத்துள்ளார்.

பின்னர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்ற குணாதேவி கடந்த ஆண்டு செல்போனில் பேராசிரியர் ரூபேஷ் சதிஷ்குமாரை மீண்டும் தொடர்பு கொண்டு “நான் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறேன். தந்தை இறந்து விட்டதால்  படிப்பிற்கு பணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்,மேலும் எனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதால் உயிருக்கு போராடி வருகிறேன் எனவே சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக மருத்துவர்கள் சொன்னார்கள்” என  கூறியுள்ளார்

இதனைக் கேட்டு மனம் உருகி குணாதேவி சொன்னது உண்மை என்று நம்பிய பேராசிரியர் ரூபேஷ் சதீஷ்குமார் உடனடியாக ரூ.15 லட்சத்தை அந்தப் பெண்ணுக்கு அனுப்பி உள்ளார். அதன்பின்னர் பேராசிரியர் அந்த பெண்ணுக்கு உதவி செய்ய  வாட்ஸ்-அப் குரூப் ஒன்றை உருவாக்கி தனது நண்பர்கள், குடும்பத்தினர், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட பலரை அதில் இணைத்து மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு மற்றும் படிப்பிற்கு உதவும் படி அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த குழுவில் இருந்தவர்களும் பேராசிரியரின் வேண்டுகோளை ஏற்று  பணம் அனுப்பி உள்ளனர். அவர்கள்  அனுப்பிய பணம் ரூ.54 லட்சத்தை அந்த பெண்ணின் மருத்துவ செலவு மற்றும் ஐ.ஏ.எஸ். படிப்புக்கு பேராசிரியர் வழங்கி உள்ளார். மேலும் பேராசிரியர் மட்டும் குணாதேவிக்கு ரூ.70 லட்சம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுதவிர சமூக வலைதளங்களில் கொடுத்த விளம்பரம், பதிவு மூலம் பலர் ரூ.10 லட்சம் வரை குணாதேவியின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் குணாதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். பயிற்சி முடிந்து விட்டதாக கூறி அவரின் அடையாள அட்டையை பேராசிரியரின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார். அடையாள அட்டையை கண்ட பேராசிரியருக்கு  சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால்  அந்த ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடெமிக்கு சென்று அவரை பற்றி பேராசிரியர் விசாரித்துள்ளார். அப்போது  குணாதேவி அங்கு பயிற்சி பெறவில்லை என்று தெரிய வந்தது. மேலும் அவர் பல நபர்களிடம்  குணாதேவி குறித்து விசாரித்தபோது தான் ஐ.ஏ.எஸ். படிப்பதற்காக மற்றும் மருத்துவ செலவிற்காக என்று கூறி பேராசிரியர் உட்பட பலரிடம் பண  மோசடி செய்தது தெரியவந்தது.

எனவே இதுகுறித்து ரூபேஷ் சதீஷ்குமார் செல்போனில் அந்த பெண்னை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறி உள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்  இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவில் புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குணாதேவி ஐ.ஏ.எஸ். படிப்பதற்காக மற்றும் மருத்துவ செலவிற்காக என்று கூறி ஏமாற்றி மோசடி செய்தது உறுதியானதை  அடுத்து அவரை கைது செய்த அவர் இதுபோன்று வேறு யாரிடமும் பணம் பெற்று ஏமாற்றி உள்ளாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைத்தனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.