Admin
க்ரைம்

“ஜாதி பெயரை சொல்லி தான் வெட்டுனாங்க” - அடுத்தடுத்து 7 பேரை வெட்டிய கஞ்சா கும்பல்… பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தால் பரபரப்பு!

உடனடியாக தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி, மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்...

Mahalakshmi Somasundaram

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் கடந்த (மே 29) ஆம் தேதி முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திருமண வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே கும்பல் தொடர்ந்து நெல்லை மாவட்டம் மானூர் அருகே தெற்குப்பட்டி பகுதியில் வீதியில் நின்றிருந்த இருவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல்களில் ரமேஷ், அருள்மாறன், சந்தோஷ்குமார், ராம்குமார் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்தனர். மேலும், தெற்குப்பட்டியைச் சேர்ந்த முபாரக் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் உடனடியாக தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி, மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருள்மாறன், சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “சம்பவத்தன்று ஐந்து இரு சக்கர வாகனத்தில் சுமார் பத்து பேர் வந்தனர். இவர்களில் 8 பேர் முகமூடி அணிந்திருந்த நிலையில் ஒரு வாகனத்தில் இருந்த இருவர் மட்டும் முகமுடி அணியாமல் வந்திருந்தனர்.

நாங்கள் வீட்டின் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென என்னை அரிவாளால் வெட்டினர். எனது அலறல் சத்தம் கேட்டு வந்த என் தந்தை ரமேஷையும் தாக்கினர். பின்னர் என் தாயையும் துரத்திச் சென்றனர். அதன்பிறகு திருமண வீட்டில் இருந்தவர்களையும் தாக்கினர்கள். திருமணத்திற்காக பேனர் வைத்த போது ஒரு சிறுவன் வந்து தகராறு செய்தார். அவனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டோம் அவர் மீது தான் சந்தேகம் உள்ளது” என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை விசாரித்த போது அந்த சிறுவன் ஆத்திரத்தில் ஆட்களை திரட்டி வந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. தாக்குதலின் போது அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும் ஜாதி பெயரை கூறியே எங்களை தாக்கினர்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தாக்குதலின் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரண்டு முறை தொடர்ந்அரிவாள் வெட்டு தாக்குதல் நடத்த நிலையில் மீண்டும் அதே போன்று தொடர் தாக்குதல் நடந்த சம்பவம் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் உடனடியாக காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேலும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்கும் என்றும், கஞ்சா போதையிலேயே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் உடனடியாக போதை பொருள் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்