க்ரைம்

“நகைக்காக 60 வயது பெண்ணை கொன்ற 17 வயது சிறுமி” - மகளுடன் சேர்ந்து தாய் போட்ட பக்கா பிளான்… நடுக்காட்டில் நடந்த பகீர் சம்பவம்!

மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் நடுவில் அமர வைத்து இரண்டு பெண்கள் அவ்வழியாக சென்றது பதிவாகி இருந்தது...

Mahalakshmi Somasundaram

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் என்பவரின் மனைவி 62 வயதுடைய மூதாட்டி அம்பிகா இவர் கடந்த (மார்ச் 8) ஆம் தேதி காரியாபட்டி அருகே உள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு உறவினர்கள் வீட்டில் நடக்கும் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றிருக்கிறார். பின்னர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து அவரது உறவினர்கள் அம்பிகாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இதுகுறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போனதாக கூறப்படும் மூதாட்டி அம்பிகா பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சுழியில் இருந்து காரியாபட்டி செல்லும் சாலையில் புலிக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பார்த்த போது சடலமாக கிடந்தது மூதாட்டியான அம்பிகா என தெரிய வந்தது.

எனவே மூதாட்டி அம்பிகா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை இருந்த போதிலும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்ததால் மூதாட்டியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.திருச்சுழி போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் கொலைச் சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது கொலை செய்யப்பட்ட மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் நடுவில் அமர வைத்து இரண்டு பெண்கள் அவ்வழியாக சென்றது பதிவாகி இருந்தது.

இதனையடுத்து திருச்சுழி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தொடர் விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வந்த நிலையில் எஸ்.தோப்பூர் பகுதியை சேர்ந்த தாய் மற்றும் மகளை கைது செய்தனர். 39 வயதுடைய லோகாம்பாள் மற்றும் அவரது 17 வயது மகளான சிறுமி ஆகியோரை திருச்சுழி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட மூதாட்டியான அம்பிகா சம்பவத்தன்று சித்து மூன்றடைப்பு பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படும் நிலையில் அந்த வழியாக டூவீலரில் வந்த லோகாம்பாள் மற்றும் அவரது மகளும் மூதாட்டியை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இறக்கி விடுவதாக கூறி நைசாக பேசி டூவீலரில் ஏற்றி சென்றிருக்கின்றனர்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று நகைக்காக அவரை கொலை செய்து அவரிடம் இருந்த நகைகளை கைப்பற்றி உடலை திருச்சுழி அருகே உள்ள காட்டுப்பகுதியில் வீசி விட்டு அங்கிருந்து தாயும் - மகளும் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மூதாட்டியை நகைக்காக கொலை செய்த லோகாம்பாள் மற்றும் அவரது மகள் 17 வயது சிறுமி ஆகிய இருவரையும் கைது செய்த திருச்சுழி போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 4 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் திருச்சுழி அருகே காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து மூதாட்டியை இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் திருச்சுழி அருகே காட்டுப்பகுதியில் நேற்று மூதாட்டி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.