andhra Sandhya Murder 
க்ரைம்

“பொண்டாட்டிய விட பணம் தான் முக்கியம்” - காதல் மனைவியின் மூச்சை அடக்கி கொன்ற கணவன்.. விடிந்ததும் போட்ட நாடகம்!

பலமுறை பண உதவி செய்ததாகக் கூறப்படும் நிலையில், முத்யாலா ராவின் பண ஆசை குறையவில்லை...

Mahalakshmi Somasundaram

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில், 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த மனைவியை பண ஆசைக்காக கணவனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரம் மாவட்டம் கனிமேர்கா கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய புங்கா சந்தியா. இவர் அதே பகுதியை சேர்ந்த ராம் முத்யாலா என்பவரை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு 9 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்தின் தொடக்கத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாகப் பணப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே பணத்தேவைக்காக கணவன் முத்யாலா ராவ், சந்தியாவை அவரது பெற்றோர் வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு அடித்துத் துன்புறுத்தியதுடன், தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மகள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக சந்தியாவின் தாயார் பலமுறை பண உதவி செய்ததாகக் கூறப்படும் நிலையில், முத்யாலா ராவின் பண ஆசை குறையவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த (செப் - 01 ) செவ்வாய்க்கிழமை காலை சந்தியா தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்த சந்தியாவின் பெற்றோர்கள் அவர்களது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக படாபல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சந்தியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.

உடற்கூறாய்வு அறிக்கையில் சந்தியாவின் மரணம் இயற்கையானது அல்ல என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது மூக்கு மற்றும் வாயை பலவந்தமாக அழுத்தியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே உயிரிழப்புக்குக் காரணம் என அறிக்கையில் உறுதி செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து சந்தியாவின் கணவர் முத்யாலா ராவிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்தியாவை கொலை செய்ததை முத்யாலா ராவ் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வழக்கம்போல கடந்த செவ்வாய்க்கிழமை ராம் தனது மனைவி சந்தியாவிடம் தனது தாய் வீட்டில் இருந்து பணம் வாங்கிவருமாறு கூறிய நிலையில் சந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். எனவே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ராம் முத்யாலா “பொண்டாட்டிய விட பணம் தான் முக்கியம்” என கூறி சந்தியாவின் மூக்கு மற்றும் வாயை அழுத்தி கொலை செய்தது தெரிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீஸார், கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்