அகமதாபாத் நகரில் 34 ஆண்டுகளாக மர்மமாக இருந்த பெண் கொலை வழக்கு, டிஎன்ஏ ஆதாரங்கள் மூலம் அகமதாபாத் குற்றப்பிரிவு தற்போது உடைத்துள்ளது. வத்வா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு, 1992 முதல் காணாமல் போன ஃபர்சானா ராதன்புரியினுடையது என உறுதி செய்யப்பட்டதால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி, ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வத்வா பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். நிர்வாக நீதிபதி மற்றும் தடய அறிவியல் அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 18 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் அவை தடய அறிவியல் ஆய்வகம் (Forensic Science Laboratory) மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த எச்சங்கள் 34 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஃபர்சானா என்ற பெண் உடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
1992-ல் காணாமல் போன ஃபர்சானாவுக்கு என்ன ஆனது என்று இத்தனை நாளும் யாருக்கும் தெரியவில்லை. அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஒரு வீட்டிற்கு அடியில் புதைக்கப்பட்டதாக டிஎன்ஏ அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஃபர்சானா பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்ததும், அதனால் அவரது கணவர் ஷம்சுதீன் கோபமடைந்திருந்ததும் தெரியவந்துள்ளது. அவள் குடும்பத்திற்கு ஏற்படுத்திய களங்கத்தால் வெறுப்படைந்த கணவர் ஷம்சுதீன், தனது சகோதரர் இக்பால் மற்றும் நண்பர் அப்துல் கரீம் ஆகியோருடன் சேர்ந்து ஃபர்சானாவைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
1992-ஆம் ஆண்டு ஒருநாள் நள்ளிரவில், வத்வாவின் குதுப்நகர் பகுதியில் உள்ள சல்யா பீபி என்பவரின் வீட்டிற்கு ஃபர்சானா வரவழைக்கப்பட்டதாகவும், அங்கு குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஃபர்சானாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் காவல்துறை விசாரணையில் கண்டறிந்துள்ளது. கொலையைச் செய்த பிறகு, சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவரது உடலை வீட்டிற்கு அடியில் புதைத்துள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட நீண்டகால மோதல்கள் மற்றும் கணவன் மனைவி வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சினைகள் இந்த கொலையின் பின்னணியாக இருக்கும் என கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட பின்னர், ஆதாரங்களை மறைக்க ஃபர்சானாவின் உடல் அந்த வீட்டின் கழிவுநீர் குழிக்குள் புதைக்கப்பட்டதாக குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஷம்சுதீன் முசாஜி கெடவாலா (61), இக்பால் முசாஜி கெடவாலா (63) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இந்த வழக்கில் பகிர் அதிர்ச்சி அளித்த மற்றொரு தகவல், குற்றவாளி குடும்பத்தினரே பல ஆண்டுகளாக “பேய் பயம்” மற்றும் மாயத் தோற்றங்களால் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் “நிழல் தங்களை துரத்துகிறது” என அச்சமடைந்த குடும்பத்தினர், மாந்திரீகம் மற்றும் தாந்திரீக சடங்குகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தான் 1992-ல் நடந்த கொலை குறித்த தகவல்கள் வெளியே கசியத் தொடங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மீண்டும் விசாரணையை தொடங்கிய அகமதாபாத் குற்றப்பிரிவு, அறிவியல் ஆதாரங்களின் மூலம் 34 ஆண்டுகளாக புதைந்திருந்த பெண்ணின் கொலை மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கொலை, ஆதாரங்களை அழித்தல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.