ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய கிராந்தி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணமாகி வசித்து வந்திருக்கின்றனர். அப்போது கிராந்தி வீட்டில் ஏசி பழுதாகிய நிலையில் அதனை சரி செய்ய 27 வயதுடைய ஷேக் அகமத் என்ற நபர் அவரது வீட்டிற்கு சென்ற நிலையில் கிராந்திக்கும் ஷேக் அகமத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே ஷேக் அகமத் கிரந்தியை திருமணம் செய்து கொள்ள முடி செய்த நிலையில் கிராந்தி அவரது கணவரை சட்டப்படி பிரிந்து வந்திருக்கிறார்.
ஆனால் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் கிராந்தி ஏற்கனவே திருமணமானவர் என்பதாலும் ஷேக் அகமதுவின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் இவர்களது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் ஷேக் அகமத் கிரந்தியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மங்களகிரி பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கி வசித்து வந்திருக்கின்றனர். அப்போது கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு வாக்குவாதம் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைமுடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஷேக் அகமத் மற்றும் கிராந்திக்கு இடையே வழக்கம் போல வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிராந்தி ஷேக் அகமத்தை வீட்டில் இருந்த கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஷேக் அகமத்தை மீட்டு விஜயவாடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஷேக் அகமத்தின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிராந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் டிவி சத்தத்தை குறைக்க சொன்ன கணவரை மனைவி குத்தி கொலை செய்ததாக தவறான செய்தி பரவி வரும் நிலையில் அதனை நம்ப வேண்டாம் என்றும் கிராந்தி மற்றும் ஷேக் அகமத் வசித்து வந்த வீட்டில் டிவி இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.