பெங்களூருவில் உள்ள ஒரு சலூனிற்கு பெண் ஒருவர் முடி திருத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு ஊழியராக பணியாற்றிய நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தான் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அந்த ஊழியர் தன்னை மீண்டும் மீண்டும் தகாத முறையில் தொட்டதாகவும்,31 வயது பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புவனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், ராஜாஜிநகரில் வசித்து வருகிறார். ராஜாஜிநகர் தொழிற்பேட்டைக்கு அருகிலுள்ள சலூனில் சம்பவம் நடந்ததற்கு ஒருநாளுக்கு பிறகு, நவம்பர் 13 அன்று புவனா, பசவேஸ்வரநகர் காவல்துறையை அணுகி புகாரளித்துள்ளார்.
அவரது புகாரின்படி, புவனா வழக்கமான ஹேர் ஸ்பா சிகிச்சைக்காக, நடிகை அஞ்சலி அரோராவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் அந்த சலூனுக்குச் சென்றுள்ளார். அவர் செல்லும்போது, மாலை 6.40 மணிக்கும் 7.10 மணிக்கும் இடையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அர்சலங்காழி என அடையாளம் காணப்பட்ட ஒரு ஊழியர் புவனாவுக்கு மசாஜ் செய்துகொண்டிருந்தபோது அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தனக்கு மசாஜ் செய்துகொண்டிருந்தபோது, அந்த ஊழியர் வேண்டுமென்றே தனது டி-ஷர்ட்டுக்குள் கைகளை நுழைத்து, முறையற்ற விதத்தில் தொட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் தனது உள்ளாடையையும் இழுத்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக இதை நிறுத்துமாறு கூறி விட்டு தனது தலைமுடியைக் கழுவுவதோடு நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் புவனா தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து அதேபோல் செய்ததாகவும், பின்னர் "முதுகையும் மசாஜ் செய்யலாமா?" என்று அந்த ஊழியர் கேட்டதாகவும் புவனா தெரிவித்துள்ளார்.
புவனா உடனடியாக சலூனிலிருந்து வெளியேறுவதற்காகத் தன் தலைமுடியைக் கழுவி முடிக்குமாறு அந்த ஊழியரை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். புவனா இரண்டு மூன்று முறை வற்புறுத்திய பிறகுதான், அந்த ஊழியர் இறுதியாக அவரது தலைமுடியைக் கழுவி உணர்த்தியுள்ளார். பின்னர் புவனா கட்டணத்தைச் செலுத்திவிட்டு உடனடியாக சலூனிலிருந்து வெளியேறியுள்ளார்.
புவனா மறுநாள் காவல்துறையை அணுகி சலூனில் நடந்த அனைத்தையும் புகாராக கொடுத்துள்ளார். பின்னர் பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) 75வது பிரிவின் (பாலியல் துன்புறுத்தல்) கீழ் பசவேஸ்வரநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 24 வயதான அர்சலங்காழி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், விசாரணையின் போது, அவர் அப்பெண்ணின் தோள்களை மட்டுமே மசாஜ் செய்ததாகவும், மற்ற எந்த அத்துமீறலில் தான் ஈடுபடவில்லை என்றும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்ததாகத் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.