murder 
க்ரைம்

“போலி நகைகளை அடகு வைத்த பெண்…” காத்திருந்து பிடித்த கடை உரிமையாளர்!! ஆனால் 5 -பேர் சேர்ந்து இப்படி பண்ணீட்டாங்களே!?

ராஜாராமை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்.

மாலை முரசு செய்தி குழு

கோவை சரவணம்பட்டி அருகே போலி நகையை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை,  நகை அடகு கடை உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் அடித்தேக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச்சேர்ந்த ராஜாராம் என்பவர் சின்னவேடம்பட்டி அடுத்த சின்ன மேட்டுப்பாளையம் அருகே, ‘சிவசெல்வி நகை அடகு கடை’ என்ற பெயரில் தங்க நகை அடகு கடை ஒன்றை கடந்த 9 மாதமாக நடத்தி வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி அன்று அவரது கடைக்கு வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது பெயர் சுமதி என்றும் திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்ட தான் சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் அணிந்துள்ள தங்க நகையை அடகு வைக்க வேண்டும் எனவும், அதற்கு அடகு தொகையாக 50,000 ரூபாய் வேண்டும் என்றும் கேட்கவே, நகையை பரிசோதித்த கடையின் உரிமையாளர் ராஜாராம் அப்பெண் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். 

அதைத் தொடர்ந்து ஒன்பதாம் தேதி மற்றும் பன்னிரண்டாம் தேதி என அடுத்தடுத்து, கடைக்கு வந்த அப்பெண் மேலும் சில நகைகளை கொடுத்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுச் சென்றுள்ளார். பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே ராஜாராம்,  அந்த நகைகளை பரிசோதித்த போது அவை போலி நகைகள் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாராம் காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்காமல் மீண்டும் அப்பெண் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் அதே போன்று அடகு கடைக்கு வந்த அப்பெண் தான் அணிந்திருந்த இரண்டு வளையல்களை கொடுத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.அப்போது  அப்பெண்ணை பிடித்து அங்கேயே அமர வைத்த கடையின் உரிமையாளர் ராஜாராம் தனது நண்பரான மகேந்திரனை அழைத்து சம்பவம் குறித்து கூறியுள்ளார். அதன் பெயரில் அங்கு வந்த மகேந்திரன் தனது நண்பர்கள் மூவரையும் அழைத்து 5 பேரும் சேர்ந்து பெண்ணை மிரட்டி தாக்கி ஏற்கனவே மோசடி செய்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.

மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக யாரெல்லாம் இருந்தார்கள் எனவும் கேட்டு தொடர் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் பெண் எந்த பதிலும் கூறாத நிலையில் இரவு வரை கடையில் அமர வைத்த அவர்கள் பின்னர் கடைக்கு பின்புறம் உள்ள அறைக்கு பெண்ணை அழைத்துச்சென்று கட்டை மற்றும் கைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அப்பெண் மயக்கமடைந்த சூழலில் அங்கிருந்து சென்றுள்ளனர்.பின்னர் நள்ளிரவில் அங்கு சென்று பார்த்தபோது கடும் தாக்குதலுக்குள்ளான பெண் மூர்ச்சையற்று கிடக்கவே அதிர்ச்சி அடைந்த ராஜாராம் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து ராஜாராமை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு உயிரற்ற நிலையில் சடலமாக கிடந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் ராஜாராம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவியான சுதா என்பதும் கணவரை பிரிந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியே சேலத்தில் பழக்கடை நடத்தி வரும் சுதா அவ்வப்போது கோவைக்கு வந்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. 

இதனிடையே உயிரிழந்த சுதாவை கோவைக்கு அழைத்து வந்தது யார் அவர் ஏதாவது வழிப்பறி கும்பலுடன் தொடர்பில் இருந்தாரா? அவர் மீது ஏற்கனவே வழக்குகள் ஏதாவது உள்ளதா? என்பதை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து அடித்தே கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.