க்ரைம்

“மகளின் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய பெண்?” - மயக்க மருந்து கொடுத்து நடந்த கொடூரம்?

உயிரிழந்ததாகவும், பின்னர் அவரது உடலை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும்

Muthu Lakshmi

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கணவருக்கு மயக்க மருந்து கொடுத்து, மகள் மற்றும் அவரது காதலனின் உதவியுடன் கல்லால் தாக்கி கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் உடலை யமுனை நதிக்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று எரித்து, அங்கே புதைத்ததாக கூறப்படும் நிலையில், மூன்று நாட்களாக தேடுதல் நடைபெற்றும் உடல் கிடைக்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் ஜெய்சிங்புரா பகுதியில் உள்ள ராதா-கிருஷ்ண வட்டிகா பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் சோனி (42). இவரது மனைவி நைனா (40). இவர்களது இளைய மகள் பக்தி. இவர் விமல் சௌத்ரி (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த உறவை தந்தை மனோஜ் எதிர்த்து வந்ததாககவும் கூறப்படுகிறது. மேலும் மனோஜ் தனது மகளை விமலுடன் பார்த்ததாகவும், இதையடுத்து மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மனோஜுக்கும் அவரது மனைவி நைனாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மனோஜ் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏப்ரல் 21ஆம் தேதி நைனா காவல்துறையில் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால், மறுநாளே எந்த காரணமும் சொல்லாமல் அந்த புகாரை அவர் திரும்பப் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மனோஜை தொடர்ந்து காணாததால், அவரது மூத்த சகோதரர் ராம்பாபு மே 9ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நீண்ட நாட்களாகியும் மனோஜ் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ராம்பாபு முதலமைச்சரின் இணையதளம் மூலமாகவும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மூத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்லோக் குமாரின் உத்தரவின் பேரில் ஜூலை 11ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது, நைனா தனது கணவருக்கு மயக்க மருந்து கலந்த பாலை கொடுத்ததாகவும், அவர் சுயநினைவை இழந்த பின்னர் தனது மகள் பக்தி மற்றும் அவரது காதலன் விமல் சௌத்ரியின் உதவியுடன் கல்லால் தாக்கியதாகவும் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மனோஜ் உயிரிழந்ததாகவும், பின்னர் அவரது உடலை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அங்கு உடலை எரித்த பின்னர், சாம்பலை அப்பகுதியிலேயே புதைத்ததாக நைனா குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் மனோஜின் உறவினர்களுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நைனா, பக்தி மற்றும் விமல் சௌத்ரி ஆகிய மூவரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, மனோஜின் உடலை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் யமுனை நதிக்கரையோரம் உள்ள அக்ரூர் கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் தோண்டிப் பார்த்தும் இதுவரை உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் சரியான இடத்தை அடையாளம் காட்ட முடியாமல் இருப்பதும், தொடர்ந்து பெய்து வரும் மழையும் தேடுதல் பணிக்கு சவாலாக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்து யமுனை நதிக்கரை வரை சுமார் 6 கிலோமீட்டர் சுற்றளவில் தேடுதல் நடைபெற்று வருகிறது.

மேலும், மனோஜ் காணாமல் போனது தொடர்பாக நைனா முதலில் புகார் அளித்துவிட்டு பின்னர் அதைத் திரும்பப் பெற்றது ஏன் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மனோஜின் உடல் இதுவரை மீட்கப்படாததால், அவர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. உடல் மீட்கப்பட்டு, தடயவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே சம்பவத்தின் முழுமையான உண்மை நிலை தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து தேடுதல் மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.