க்ரைம்

“பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ” - 1 லட்சம் கடனுக்காக அத்துமீறல்.. மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்!

பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுமாறு கூறி தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார்...

Muthu Lakshmi

பெங்களூரில் கடன் வட்டியைச் செலுத்தாத காரணத்தால் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பெண்ணின் ஆபாச வீடியோவை பதிவு செய்து, அதை இணையத்தில் வெளியீடுவதாக மிரட்டியுள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் நஸ்ரத், ரேஷ்மா, சுஹைல் மற்றும் சைஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த சகுந்தலா என்ற பாதிக்கப்பட்ட பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மாவிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அந்த கடன் தொகைக்கு கடந்த ஆறு மாதங்களாக வட்டியைச் செலுத்தத் தவறியதாக சொல்லப்படுகிறது. சகுந்தலா, ரேஷ்மா மூலம் அறிமுகமான நஸ்ரத்திடம் இருந்தும் 50,000 ரூபாய் கடன் வாங்கி, வாரந்தோறும் 5,000 ரூபாய் செலுத்தி வந்துள்ளார். இருப்பினும், நிதி நெருக்கடி காரணமாக சுமார் நான்கு வாரங்களாக அவரால் பணம் செலுத்த முடியவில்லை.

அதன் பின்னர் பணத்தை திருப்பி கேட்டு மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில் துன்புறுத்தலுக்கு பயந்து, ரேஷ்மாவின் எண்ணை பிளாக் செய்துவிட்டு பாபுஜி நகரில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். மேலும் ரேஷ்மா சகுந்தலாவின் தாயை மிரட்டி, இவர்களை தேட ஆட்களை அனுப்பியிருப்பதாகவும், கண்டுபிடித்தால் அவள் மீது ஆசிட் வீசவும் சொல்லி அனுப்பி உள்ளார்.

இந்த நேரத்தில், நஸ்ரத் சகுந்தலாவை தொலைபேசியில் அழைத்து அவருக்கு வேலையும் பணமும் தருவதாக கூறி கொல்லரஹட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு நம்பிக்கை அளித்துள்ளார். இதை நம்பி நஸ்ரத்தின் வீட்டிற்கு தனது இளைய மகனுடன் மாலை சுமார் 5.30 மணியளவில் சென்றுள்ளார். அங்கு தன் மகனுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தபோது, சுஹைல் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கதவைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. சுஹைல் என்ற நபர் அந்தப் பெண்ணை அவதூறாக பேசி, கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 11 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். மேலும் சுஹைல் கத்தியால் அப்பெண்ணின் கையில் அடித்ததாகவும், ரேஷ்மாவும் மற்றவர்களும் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் மாலை 7 மணியளவில் அந்தப் பெண்ணும் அவரது மகனும் ஒரு ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ரேஷ்மா, நஸ்ரத், சுஹைல் மற்றும் மேலும் இருவர் அவர்களுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அந்தப் பெண்ணை கும்பல்கோடு அருகே உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்து வைத்துள்ளனர். வீட்டில், நஸ்ரத் ஏதோ மாந்திரீகம் செயலில் ஈடுபட்டதாகவும், சகுந்தலாவை ஒரு தடியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுமாறு கூறி தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார் சுஹைல். இந்தச் சம்பவத்தின் போது சகுந்தலாவின் மகன் அழத் தொடங்கியதும், அங்கிருந்து அவனை அழைத்துச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் இருவரையும் தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மறுநாள், நஸ்ரத் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக ஆடைகளைக் கழற்ற செய்து பின் ஒரு போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி உள்ளனர். அதையடுத்து சகுந்தலாவை ஒரு ஆட்டோவில் ஏற்றி சந்தை அருகே உள்ள ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்று சில ஆவணங்களில் கையொப்பமிட வைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் கும்பல்கோட்டில் உள்ள ரேஷ்மாவின் வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மீண்டும் அடைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த வீட்டில் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட போது சகுந்தலா காவல்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு பெண் காவலரும் மற்றொரு ஊழியரும் வீட்டிற்கு வந்து அவரை மீட்டனர். போலீசார் அப்பெண்ணை சந்திரா லேஅவுட் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் புகார் எழுதி வாங்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த புகாரின் அடிப்படையில் 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்