க்ரைம்

“நீ என்னை தான் காதலிக்கணும்” - காதலை முறித்து பெண்ணை சாலையில் வைத்து தாக்கிய வாலிபர்.. வேலூரில் பரபரப்பு!

தலைமறைவாக இருந்து வந்த நூர் முகம்மதுவை தேடி வந்த போலீசார் நேற்று அவரை...

Mahalakshmi Somasundaram

வேலூர் மாவட்டம், காட்பாடி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய 19 வயது மகள் வந்தனா. இவருக்கும், காட்பாடி வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நூர் முகம்மது என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்திருக்கின்றனர். பின்னர் இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வந்த நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் காதலில் வெறுப்படைந்த வந்தனா நூர் முகம்மதுவை தனக்கு பிடிக்கவில்லை என்றும், இனிமேல் தன்னை தொடர்பு கொள்ளாமல் விலகி செல்லுமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நூர் முகம்மது தொடர்ந்து வந்தனாவை தன்னை காதலிக்க வேண்டும் என தொல்லை கொடுத்து வந்த நிலையிலும் அவர் முற்றிலுமாக முகம்மதுவிடம் பேசுவதை தவிர்த்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூர் முகம்மது, கடந்த ஜூன் 1-ஆம் தேதி வந்தனாவை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த வந்தனா, இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்தில் முகம்மது மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் கடந்த (ஜூன் 06) ஆம் அன்று நூர் முகம்மது மீது புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 296(b), 115(2), 118(1), 351(3)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், போலீசில் புகார் அளித்ததால் மேலும் ஆத்திரமடைந்த நூர் முகம்மது, கடந்த (ஜூன் 11) அன்று இரவு வடுகன்குட்டை பகுதியில் வைத்து “நீ என்னை தான் காதலிக்கணும்” என குறி வந்தனாவை மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த வந்தனா, கடந்த 13.06.2026 அன்று இரவு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நூர் முகம்மதுவை தேடி வந்த போலீசார் நேற்று அவரை வேலூர் புது பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நூர் முகம்மது சிறையில் அடைக்கப்பட்டார். காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை தொடர்ந்து தாக்கிய சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.