தேனி மாவட்டம் போடியில் கொரோனா தனிமைப்படுத்துதல் விவகாரத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தில், மூதாட்டியை கழுத்தை கடித்து கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனையும், 53 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தேனி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜே.கே.பட்டி ஸ்ரீராம் நகர் முனிசிபல் கல்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் மணிகண்டன் (34). இவர் இலங்கையில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் ஊர் திரும்பியுள்ளார். கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு அதிகாரிகள் அவரை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 26.03.2020 அன்று மாலை, மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி வீட்டிற்கு மந்திரிக்க சென்றுள்ளார். அழகர்சாமியின் மனைவி நாச்சியம்மாள் (75) என்ற மூதாட்டியும் அங்கு இருந்துள்ளார். அப்போது நாச்சியம்மாள், “தள்ளி நின்று மந்திரிங்க... கொரோனா வந்திடும்” என தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த மணிகண்டன், அவர்களை சாதியைச் சுட்டிக்காட்டி வன்மத்துடன் பேசியுள்ளார். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து மணிகண்டனை சமாதானப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர் அவரின் குடும்பத்தார். இந்த விரோதத்தின் காரணமாக, மறுநாள் 27.03.2020 அன்று மாலை சுமார் 5.30 மணியளவில், தனது வீட்டில் இருந்து நிர்வாணமாக ஓடி அழகர்சாமி வீட்டிற்கு வந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை பிடிப்பதற்காக பின்னால் ஓடினார்கள்.
ஓடி வந்த மணிகண்டன் அழகர்சாமி வீட்டிற்குள் புகுந்து, மூதாட்டி நாச்சியம்மாளின் கழுத்தை கடித்துக் குதறி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போடி நகர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நாச்சியம்மாள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த வழக்கின் விசாரணையானது தேனியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், குற்றவாளி மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 53,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் அபராத தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அனுராதா அவர்கள் தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.