திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நொச்சியூர் ஊராட்சி விளாத்துவெளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ஜெயலட்சுமி. இவர் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுனராக (டெக்னீசியன்) பணிபுரிந்து வருகிறார். இவர் முத்துப்பேட்டை தெற்குகாடு பகுதியை சேர்ந்த மாதேஷ் என்ற வாலிபரை காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் வீட்டாரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தெற்குகாடு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் சென்று வேலை பார்த்து வந்துள்ளார் ஜெயலட்சுமி.
மாதேஷ் மற்றும் மனைவி ஜெயலட்சுமி இருவருக்கும் சில நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளது. “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்" என்பது போல திருமணமான புதிதில் தம்பதிகளிடையே அதீத ஈர்ப்பு இருந்த நிலையில் காலப்போக்கில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதை இரு வீட்டாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அதில் தலையிடவில்லை என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த ஜெயலட்சுமி தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் மாதேஷ் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த அரசு மருத்துவர், டெக்னீசியன் ஜெயலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து ஜெயலட்சுமி குடும்பத்தாருக்கும் தெரிய படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலட்சுமியின் தந்தை சுப்பிரமணியன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் “தனது மகள் ஜெயலட்சுமி சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சப்.இன்ஸ்பெக்டர் ராகுல் மற்றும் போலீசார் கணவர் மாதேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஓராண்டு ஆகுவதால் மன்னார்குடி ஆர்டிஓ மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணின் இந்த முடிவும் அதற்கான சந்தேகமும் சோகத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.