டெல்லிக்குப் பக்கத்தில் உள்ள ஃபரிதாபாத்தில் ஒரு பயங்கரமான கொலை நடந்திருக்கிறது. காப்பீட்டு முகவர் ஒருவரின் சடலம் வாய்க்காலில் கிடந்ததை போலீஸ் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தக் கொலையைச் செய்த குற்றத்துக்காக ஒரு இளம் பெண்ணையும், அவரது வருங்காலக் கணவரையும் காவல்துறை கைது செய்துள்ளனர். முன்னாள் காதலன் மிரட்டியதால்தான் இந்தக் கொடூரக் கொலையைச் செய்ததாக அவர்கள் விசாரணையில் சொல்லி இருக்கிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அட்மத்பூர் பாலத்துக்கு அருகில் உள்ள மயானப் பகுதிக்குப் பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று நின்றிருக்கிறது. சந்தேகம் அடைந்த போலீஸார், அருகில் இருந்த வாய்க்காலைச் சோதித்தபோது, அங்கே ஒரு ஆண் சடலம் கிடந்ததைப் பார்த்திருக்கிறார்கள். சடலத்துக்குத் தலையில் பலமாகக் காயம் இருந்திருக்கிறது, கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட அடையாளம் இருந்தது. இறந்தவர், டெல்லியில் உள்ள கல்யாண்புரியைச் சேர்ந்த சண்டர் என்ற காப்பீட்டு முகவர் என்று மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணைப் பார்த்து போலீஸ் அடையாளம் கண்டுபிடித்தனர். சண்டரின் அண்ணன் புகார் கொடுத்ததன் பேரில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையைத் தொடங்கிய போலீஸார், இந்த வழக்கில் லக்ஷ்மி (29) என்ற பெண்ணையும், அவரது வருங்காலக் கணவர் கேஷவ் (26) என்பவரையும் கைது செய்திருக்கிறார்கள். லக்ஷ்மிக்கும் சண்டருக்கும் கடந்த நான்கு, ஐந்து வருடங்களாகப் பழக்கம் இருந்திருக்கிறது. லக்ஷ்மிக்கு கேஷவ் உடன் நிச்சயம் ஆனதும், சண்டர் அதைப் பிடிக்காமல் லக்ஷ்மியை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். "என்னைக் கல்யாணம் பண்ணாமல். நீ கேஷவை மணந்தால், உன் வாழ்க்கையைக் கெடுத்துவிடுவேன்" என்று சண்டர் பிளாக்மெயில் செய்திருக்கிறார். அதனால் வெறுத்துப்போன லக்ஷ்மியும் கேஷவ்வும் சண்டரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள்.
கொலை நடந்த சனிக்கிழமை அன்று, லக்ஷ்மி சண்டரை மீத்தாபூருக்கு வரச் சொல்லி அழைத்திருக்கிறார். அங்கிருந்து இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஆள் இல்லாத காட்டுப் பகுதி போல இருந்த அட்மத்பூர் பாலம் பக்கத்தில் சென்றுள்ளனர். அங்குதான் கேஷவ், அவருடைய இரண்டு நண்பர்களுடன் தயாராகக் காத்திருக்க, மூவரும் சேர்ந்து சண்டரைக் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்று உடலை வாய்க்காலில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் லக்ஷ்மி, கேஷவ் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தக் கொலைக்கு உதவிய மற்ற இரண்டு நண்பர்களையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.