'முன்னாள் முஸ்லிம்' என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்த யூடியூபர் சலீம் வாஸ்திக் என்பவர் தற்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், அவர் மீதான பழைய கொலை வழக்கு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் 13 வயது மகனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிதான் இந்த சலீம் என்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி, டெல்லியில் சிமெண்ட் வியாபாரம் செய்து வந்த ஒருவரின் மகன் சந்தீப் பன்சால் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அந்தத் தொழிலதிபர் குடும்பத்தினருக்கு வந்த ஒரு போன் காலில், சிறுவனைக் கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை உயிருடன் விடுவிக்க 30,000 ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. பணத்தை லோனி மேம்பாலம் அருகே உள்ள ஒரு பேருந்தில் வைத்துவிட வேண்டும் என்றும், போலீசுக்குத் தெரிந்தால் சிறுவன் கொல்லப்படுவான் என்றும் கடத்தல்காரர்கள் எச்சரித்தனர். இருப்பினும், குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில், சந்தீப் பன்சால் கடைசியாக 'மாஸ்டர்ஜி' எனப்படும் ஒரு உயரமான நபருடன் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், தர்யாகஞ்சில் உள்ள ஒரு பள்ளியில் தற்காப்புக் கலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சலீம் கானை (தற்போதைய சலீம் வாஸ்திக்) போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது நண்பர் அனில் என்பவருடன் சேர்ந்து சிறுவனைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சிறுவனின் உடல் முஸ்தபாபாத் பகுதியில் உள்ள ஒரு சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வழக்கில் 1997-ல் நீதிமன்றம் சலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த சலீம், 2000-ஆம் ஆண்டு இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துவிட்டு தலைமறைவானார். தன்னைத் தானே இறந்துவிட்டதாக அறிவித்துக் கொண்ட அவர், சலீம் அகமது மற்றும் சலீம் வாஸ்திக் என்ற புதிய பெயர்களில் வாழத் தொடங்கினார். ஹரியானாவில் பல ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்த அவர், 2010-ல் காசியாபாத்திற்கு வந்து ஒரு துணிக்கடையைத் தொடங்கினார். பின்னர் ஒரு யூடியூபராகவும், சமூக ஆர்வலராகவும் தன்னை மாற்றிக் கொண்ட அவர், மதம் மற்றும் தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோக்களைப் பதிவிட்டு பிரபலமானார்.
சலீம் வாஸ்திக்கின் இந்த 'மாற்று வாழ்க்கை' குறித்து ஈர்க்கப்பட்ட ஒரு பாலிவுட் தயாரிப்பாளர், அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டு, அதற்காக 15 லட்சம் ரூபாய் முன்பணமும் கொடுத்திருந்தார். ஆனால், கடந்த மாதம் அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அவரது வீட்டின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசாருக்கு, பழைய பதிவுகள் மற்றும் கைரேகைகள் மூலம் அவர் 31 ஆண்டுகளுக்கு முன்பு தப்பிய கொலைக் குற்றவாளி என்பது தெரியவந்தது.
கடந்த மாதம் சலீம் மீது தாக்குதல் நடத்திய ஜீஷான் மற்றும் குல்பாம் என்ற இரு சகோதரர்கள், சலீம் மத நிந்தனை செய்ததாகக் கூறி அவரைக் கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த சலீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பழைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், சலீமைத் தாக்கிய குற்றவாளிகள் இருவரும் போலீசாருடன் நடந்த தனித்தனி என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்