Chengalpattu Madurantakam School Students 
மாவட்டம்

“காலை உணவு திட்டம்” விரிவாக்கம் செய்த மறுநாளே இப்படியா? மாணவர்கள் சாப்பிட்ட உணவில் இருந்த ‘பல்லி’.. 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

இன்று காலை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக உப்மா மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது...

Mahalakshmi Somasundaram

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த விரிவாக்கத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (செப். 22) சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கி வைத்தார். இதேபோல், பல்வேறு மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப பள்ளியில் இன்று காலை உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த மேலகண்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மொத்தம் 24 மாணவர்கள் பயின்று வருகின்றனர். காலை உணவுத்திட்டத்தின் அடிப்படையில் வழக்கம்போல் இன்று காலை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக உப்மா மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது.

Chengalpattu Madurantakam School Students

பள்ளிக்கு வந்த மாணவர்களில் முதற்கட்டமாக 11 மாணவர்கள் உணவை சாப்பிட்ட நிலையில் அடுத்த கட்டமாக மீது உள்ள மாணவர்கள் உணவு பரிமாற சமையல் உதவியாளர் பாத்திரத்தை பார்த்த போது, உணவுப் பாத்திரத்தில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக பள்ளி நிர்வாகம் உணவு அருந்திய 9 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 11 பேர் மருத்துவ பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மயக்க நிலையில் உள்ளதால் அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லி விழுந்த உணவு சாப்பிட்டதால் மாணவர்கள் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா அல்லது மாணவர்களின் உடல்நலக் குறைவுக்கு வேறு காரணமா உள்ளதா என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே முழுமையான தகவல் தெரியவரும். என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்த மறுநாளே இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் இந்த திட்டத்தை அதிக பாதுகாப்போடும், விழிப்புணர்வோடும் பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்