திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பகுதியில் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி காம் படிக்கும் மாணவர்கள் இருவர் இடையே பகுதி நேர வேலை செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு மாணவன் அருகில் உள்ள விடுதியில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
எனவே அவரிடம் மற்றொரு மாணவன் அதே விடுதியில் பகுதி நேர வேலை ஏதும் இருக்கிறதா? அதில் என்னை சேர்த்துக் கொள்வார்களா? என கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்கனவே விடுதியில் வேலை செய்துகொண்டிருந்த மாணவன் “நீ என்ன வேலை பாக்க போற உன்னை இங்க செதுக்கமாட்டாங்க” என கூறி மாணவன் ஏளனமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.இதனால் மாணவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றவே இருவருக்கும் தங்களுக்கு ஆதரவாக அவர்களது நண்பர்களை அழைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவருக்கும் ஆதரவாக மேலும் பல மாணவர்கள் இணைந்து இரு குழுக்களாக பிரிந்து அவர்களுக்கிடையே மோதிக்கொண்டனர். கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்ற இந்த மோதலால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து செல்லும் கல்லூரி வளாகத்தில் குழுக்களாக மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள் மோதிக்கொண்டதை பார்த்த ஆசிரியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களை அவ்விடத்திலிருந்து கலைத்து அனுப்பியுள்ளனர். எனவே இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக விசாரணையில் இறங்கியுள்ளது இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.