தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மல்லிப்பட்டினம் சின்ன மனையைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் 21 வயதுடைய விஷ்னு . இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிப்பட்டினம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தற்போது மதுரையில் உள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த விஷ்ணுவை அவரது அண்ணனான 28 வயதுடைய கார்த்திக் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மீண்டும் கல்லூரிக்கு செல்வதற்காக சின்னமனை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று காலை விஷ்ணு மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் உள்ள தரையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அப்போது அந்த பகுதி வழியாக சென்றவர்கள் விஷுனுவின் உடலை பார்த்து விட்டு இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்களும் இந்த சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மற்றும் சேதுபாவாசத்திரம் போலீசார் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விஷ்ணு இறந்து கிடந்த இடத்தின் அருகில் உள்ள சுவற்றில் என் சாவுக்கு காரணம் ஜே.பாபு என்று எழுதப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டுதான் இதே பள்ளி ஆசிரியை ரமணி பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே பள்ளி வளாகத்தில் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விஷ்ணுவின் அண்ணன் கார்த்திக் சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்தார்.
அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் விஷ்ணுவின் சட்டைப் பையில் இருந்த தபால் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில் “ஆசிரியர் பாபு என்னை ஏமாற்றி விட்டார். நானே தவறு செய்திருந்தாலும் என்னை தவறு செய்ய தூண்டியது ஆசிரியர் பாபு தான். என் சாவுக்கு பாபு தான் காரணம்” என்று விஷ்ணு சட்டை பையில் இருந்த தபாலில் எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விஷ்ணுவை தற்கொலைக்கு தூண்டியதாக அரசு பள்ளி ஆசிரியர் பாபு மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் பாபுவை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.