Admin
மாவட்டம்

“முகத்தை மறைத்து கொண்டு மாணவிகள் புகார்” - நடன வகுப்பு வைத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள்!

அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் தங்களின் பாதுகாப்புக்காகவும் கல்விக்காகவும்

Mahalakshmi Somasundaram

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமங்களில் உள்ள மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வரும் நிலையில் இப்பள்ளியில் இசை ஆசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் ஆகியோர் மாணவிகளிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இசை ஆசிரியர் மாணவிகளுக்கு நடனம் பயிற்சி கற்றுக் கொடுக்கிறேன் என பயிற்சி அளிக்கும் போது தேவையில்லாமல்  மாணவிகளின் உடலின்  சில  இடங்களில் கை வைத்து கற்றுக் கொடுப்பதாகவும், மாணவிகள் நடனம் ஆடும் பொழுது இசை ஆசிரியர் தவறான கண்ணோட்டத்தில் மாணவிகளை பார்ப்பதாகவும் மேலும் தனியாக இருக்கும் போது நெருக்கமாக வந்து பேசுவதாகவும்  புகார் அளித்துள்ளனர்.

 அதேபோன்று தாவரவியல் ஆசிரியரும் மாணவிகளை பல்வேறு இடங்களில் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பது போல் பல்வேறு இடங்களில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும், குடித்துவிட்டு வந்து வகுப்புகளை எடுப்பதாகவும் அந்த பள்ளியில்  பயிலும் மாணவிகள் தங்களின் பாதுகாப்புக்காகவும் கல்விக்காகவும் தங்களது முகங்களை துணியால் மூடிக்கொண்டு வீடியோ மூலம் பதிவு செய்து கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பள்ளி வளாகத்திற்கு  சென்று கோவை மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் பேரூர், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதில் கல்வி துறை அதிகாரிகள் இரு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தனித்தனியாக பள்ளி வளாகத்தில் கடந்த 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற பள்ளியில் சீண்டல்கள் நடைபெறுவது குறித்து இதுவரை புகார் அளிக்கவில்லை என பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். 

வீடியோவில் ஆசிரியர்களை குற்றம் சாட்டிய மாணவிகள் “எங்களை போல் எங்களுக்கு அடுத்து வரும் மாணவிகளும் இந்த கொடுமைகளை அனுபவிக்க கூடாது எண்களின் தம்பி தங்கைகளும் இதே பள்ளியில் தான் படித்து வருகின்றனர் அவர்கள் இந்த தொந்தரவுகள் இல்லாமல் சுதந்திரமாக படிக்கச் வேண்டும்” என்று கூறி சரியான நடவடிக்கை எடுக்கும் படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.