
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சொக்கம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான மூதாட்டி சகுந்தலா. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்து வரும் நிலையில் இருவரும் திருமணமாகி தங்களது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். எனவே சகுந்தலா தனது வீட்டில் தனியாக வசித்து கொண்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இப்பகுதியில் இளைஞர்கள் அதிகமாக கஞ்சா போதைக்கு அடிமையாகி ஊர் மக்களிடம் தகராறு செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று வேலைக்கு சென்று விட்டு மதியம் உணவு இடைவேளைக்கு தனது வீட்டிற்கு சகுந்தலா வந்துள்ளார். அப்போது சகுந்தலா வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞர் ஒருவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த நிலையில் அவர் வீட்டில் நின்று கொண்டிருந்த சகுந்தலா மீது திடீரென கல்லை கொண்டு தாக்கியுள்ளார். இதனால் சகுந்தலா இளைஞரை கூச்சலிட்டு திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் மேலும் சகுந்தலா தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே மூதாட்டியை இளைஞர் தாக்கி கொலை செய்ததை அறிந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து கட்டிவைத்து அடித்துள்ளார். மேலும் மூதாட்டியை தாக்கும் முன்பு கஞ்சா போதையில் மேலும் சிலரை தாக்கிவிட்டு வந்திருக்கிறார், இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் கஞ்சா விற்பனை தாராளமாக கிடைப்பதால் இதுமாதிரியான குற்றங்கள் நடப்பதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சகுந்தலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா போதையில் இளைஞர் மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.