தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தா.அய்யம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் 27 வயதுடைய மாணிக்கம். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் மாணிக்கத்திற்கும் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த 23 வயதுடைய பிரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் மாணிக்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக சொல்லப்படுகிறது. எனவே தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பிரியா கர்ப்பமடைந்த போதும் அவரை சரிவர கவனித்து கொள்ளாமல் தொடர்ந்து குடித்துவிட்டு கொடுமை செய்து வந்துள்ளார். பின்னர் பிரியாவிற்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்களான நிலையில் மாணிக்கத்திடம் கோபித்துக்கொண்டு குழந்தையை எடுத்துக்கொண்டு பிரியா அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே மாணிக்கம் நேற்று இரவு குடிபோதையில் பிரியா வீட்டிற்கு சென்று தனது,6 மாத ஆண் குழந்தையை யாருக்கும் தெரியாமல் தூக்கிக் கொண்டு தனது வீட்டிற்கு வந்து விட்டார்.
இதையடுத்து குழந்தையை காணவில்லை என தேடிய பிரியா அவரது குடும்பத்தார் மாணிக்கம் குழந்தையை தூக்கி சென்றதை அறிந்து அவர் மீது பிரியா போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் படி கடத்தூர் போலீசார் அய்யம்பட்டி கிராமத்திற்கு சென்று குழந்தையை மீட்டு பிரியாவிடம் கொடுத்து விட்டு, மாணிக்கத்தை இன்று போலீஸ் ஸ்டேஷன் வருமாறு கூறி விட்டு சென்றனர். இதையடுத்து விசாரணைக்காக கடத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வந்த மாணிக்கம், தனது குழந்தையை தன்னிடம் மீட்டு தருமாறு போலீஸ் ஸ்டேஷன் முன்பு போதையில் சத்தம் போட்டு அளப்பறை செய்தார்.
இதை போலீசார் எவரும் கண்டு கொள்ளவில்லை. இதில் கோபம் அடைந்த மாணிக்கம் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கை, மார்பு, கழுத்து பகுதியில் அறுத்து கொண்டு கூச்சலிட்டார்.இதை அறிந்த போலீசார் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தனர் மேலும் அவரது உறவினர்கள் மாணிக்கத்தை மடக்கி பிடிக்க முயன்றும் தொடர்ந்து மாணிக்கம் போதையில் அளப்பரையில் ஈடுபட்டார். மாணிக்கம் உடலில் இருந்து ரத்தம் கொட்டியதை தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு கடத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் கடத்தூரில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.