மாவட்டம்

கணவன் கண் முன்னே நடந்த கோர சம்பவம்!!!பேருந்து மோதியதில் மனைவியும் சிசுவும் பலி..

Malaimurasu Seithigal TV

கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கடற்படை அதிகாரியின் கர்ப்பிணி மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், குழந்தையை மீட்க போராடிய மருத்துவர்களின் போராட்டமும் பலனளிக்காமல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை : பல்லவன் சாலையில் அருகே உள்ள கடற்படை குடியிருப்பில் வசித்து வருபவர் சிவா ரெட்டி. அவரது மனைவி லலிதா நிறைமாத கர்பிணியாக இருந்துள்ளார். கடற்படை அதிகாரியான சிவா ரெட்டி இன்று இரவு தனது 8 மாத கர்ப்பிணி மனைவி லலிதாவுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.

தாயும் சேயும் பலி :

 கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்திலேயே புறப்பட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, காமராஜர் சாலை மாநிலக் கல்லூரி அருகே அவர்களது பின்னால் வந்த கடற்படைக்கு சொந்தமான பேருந்து சிவா ரெட்டியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், லலிதா இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் அதே பேருந்து லலிதா தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் குழந்தையையாவது காப்பாற்ற எண்ணி உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் லலிதாவின் உடலை மீட்டு குழந்தையை மீட்பதற்காக கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்ற கடுமையாக போராடி முயற்சிகள் மேற்கொண்டபோதும், காப்பாற்ற முடியாமல் குழந்தையும் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்த லலிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கடற்படைக்குச் சொந்தமான பேருந்தை நேப்பியர் பாலம் அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்திருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் தப்பியோடிய கடற்படை பேருந்து ஒட்டுநரான ராகேஷ் குமார் (29) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.