மாவட்டம்

“நான்கு வருடங்களாக காதலித்த காதலர்கள்” - பெண்ணை அடைத்து சித்ரவதை செய்த குடும்பத்தினர்.. கொலை செய்துவிடுவதாக மிரட்டல்!

இவர்களின் காதலை சேதுபதியின் வீட்டில் ஏற்றுக் கொண்ட நிலையில் சேதுபதி கவிப்பிரியாவை திருமணம் செய்துகொண்டார்..

Mahalakshmi Somasundaram

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பழனியாண்டி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், செல்லம்மாளின் மகளான 26 வயதுடைய பவிப்பிரியா. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.சி.ஏ படித்து உள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இவர்களது காதல் குறித்து கவிப்பிரியா பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற முயற்சி செய்துள்ளார்.

இதற்கு அவரது பெற்றோர் சாதியை காரணம் காட்டி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வேறொரு நபரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளனர். இதுகுறித்து கவிப்பிரியா அவரது காதலனிடம் தெரிவித்து அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார். இவர்களின் காதலை சேதுபதியின் வீட்டில் ஏற்றுக் கொண்ட நிலையில் சேதுபதி கவிப்பிரியாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் கவிப்பிரியாவின் பெற்றோரை சமாதானப்படுத்த திருமணத்திற்கு ஒப்புதல் பெற கவிப்பிரியா வீட்டிற்குச் சென்று உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அடித்து துன்புறுத்தி வீட்டில் அடைத்து வைத்து “எங்களுக்கு பிள்ளையே வேண்டாம், என்று நைட்டோட, நைட்டா கழுத்தில் சுருக்கு போட்டு தூக்கில் தொங்க விட்டு விடுவோம் ஜாக்கிரதை அவரையும் ஆள் வைத்து முடித்து விடுவோம்” என மிரட்டி உள்ளனர். அச்சம் அடைந்த கவிப்பிரியா ஆன்லைன் மூலம் காவல் துறையினருக்கு புகார் கொடுத்து உள்ளார். அதன் பின்னர் பொள்ளாச்சி மகாலிங்கம் காவல் நிலைய காவல் துறையினர் கவிப்பிரியாவை மீட்டு வந்ததாகவும், அப்பொழுது அங்கு வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் “நீ எங்கு சென்றாலும் நிம்மதியாக உயிருடன் வாழ முடியாது” என்று மிரட்டி உள்ளனர்.

அதன் பின்னர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோரிடம் கவிப்பிரியாவின் வாழ்க்கையில் தலையிடக்கூடாது என எழுதி கேட்டதற்கு “எழுதி தர முடியாது இருவரையும் என்ன செய்கிறோம் பார்” என்று மிரட்டி சென்று உள்ளதாக தெரிகிறது.பின்னர் காவல் துறையினர் பாதுகாப்போடு சேதுபதியுடன் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி பெற்றோரின் மிரட்டல் காரணமாக அச்சம் அடைந்த அவர்கள் பெற்றோரின் மிரட்டலை தொடர்ந்து சேதுபதியின் வீட்டிற்கு செல்லாமல் இருவரும் வெளியே சென்று நண்பர்களின் வீட்டில் தங்கி உள்ளனர்.

மேலும் அவர்களது திருமணத்தை கோவை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி பவிப்பிரியாவின் உறவினர்கள் ஏழு பேர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்த சேதுபதியின் அம்மாவை பார்த்து அவரை கொலை செய்து விடுவதாகவும், இருவரையும் எங்கு பார்த்தாலும் வெட்டி வீசி விடுவோம் என மிரட்டி சென்று உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி சுமார் 12 மணியளவில் கவிப்பிரியாவின் தம்பி மணிவாசகம், அவர்களின் நண்பர் பாலா ஆகியோர் சேதுபதியின் வீட்டிற்கு சென்று இருவரை பற்றி அங்கு இருந்த சேதுபதியின் தம்பி தமிழரசனிடம் விசாரித்து உள்ளனர். பின்னர் அவரை தாக்கி விட்டு, இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்று உள்ளனர்.

இதுகுறித்து சேதுபதியின் தம்பி தமிழரசன் நெகமம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளதாகவும், புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மேலும் அவரது பெற்றோர் தொடர்ந்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதால் கவிப்பிரியாவின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்து உள்ளனர். தமிழகத்தின் மேலும் ஒரு ஆணவக் கொலை நடப்பதற்கு முன்பு காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.