மாவட்டம்

“என்ன எப்படியாவது காப்பாத்துப்பா” - உடல் பருமனை குறைக்க யூடியூப் பார்த்த மாணவி… மருந்து உண்ட சிறிது நேரத்தில் நடந்த கொடூரம்!

‘இணைவோம் இயற்கையுடன்’ என்ற YOUTUBE பக்கத்தில் உடல் எடை குறையாதவர்களுக்கு...

Mahalakshmi Somasundaram

மதுரை மாவட்டம், செல்லூர் மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த 51 வயதுடைய வேல்முருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கொத்தனார் வேலை பார்த்து வரும் வேல்முருகன் தனது இளைய மகளான கலையரசி 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் மேற்படிப்பிற்காக மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் சேர்த்துள்ளார்.

கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த கலையரசி சற்று உடல் பருமனாக இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்த நிலையில் அதை குறைக்க வேண்டும் என தாய் தந்தையிடம் தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பெற்றோர் உடல் பருமன் தானாகவே குறைந்துவிடும் என அறிவுரை கூறி வந்த நிலையில் கடந்த வாரம் கல்லூரி மாணவி கலையரசி ‘இணைவோம் இயற்கையுடன்’ என்ற YOUTUBE பக்கத்தில் உடல் எடை குறையாதவர்களுக்கு கொழுப்பை கரைய வைத்து உடலை மெலிவிக்கும் வெங்காரம் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார்.

அதை தொடர்ந்து கடந்த 16ஆம் தேதியன்று மதுரை கீழமாசி வீதியில் தேர்முட்டி பகுதிக்கு அருகில் நாட்டு மருந்து கடையில் வெங்காரம் என்ற நாட்டு மருந்து பொருளை வீட்டிற்கு வாங்கி வந்துள்ளார். இதையடுத்து சனிக்கிழமை அன்று காலை யூடியுப்பில் கூறியதுபோல வெங்காரத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் கலையரசிக்கு வாந்தி வயிற்றுபோக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலையரசியை அவரது தாயார் விஜயலட்சுமி மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய நிலையில் கலையரசிக்கு மாலை மீண்டும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் வீட்டின் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த கலையரசி தனக்கு அதிகமாக வயிறு வலிப்பதாகவும் வயிற்றுப்போக்கில் ரத்தம் வெளியேறி வருவதாகவும் கூறி தனது தந்தையை கட்டி பிடித்து “என்ன எப்படியாவது காப்பாத்துப்பா” என அழுதுள்ளார்.

மீண்டும் கலையரசிக்கு இரவு 11 மணியளவில் அதிகளவிற்கு வாந்தி அதீத வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு பெற்றோர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கலையரசியை அழைத்து சென்றுள்ளனர். அப்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் கலையரசியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கலையரசி வரும் வழியிலேயே உயிரிழந்தாக விட்டதாக கூறியதால் பெற்றோர் கதறி அழுதனர்.

அதனை தொடர்ந்து கலையரசியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரையில் கல்லூரி மாணவி உடல் பருமனை குறைப்பதற்காக யூடிப் சேனலை பார்த்து எடுத்துக்கொண்ட மருந்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.