கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை கருப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகளும், முகுந்த் என்ற 9 வயது மகனும் உள்ளனர். வேலுமணியின் வீட்டின் முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் மணிவண்ணன் என்பவர் தனது காரை அடிக்கடி நிறுத்தி விட்டு வெளியூர் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
அதன்படி, விடுமுறை தினமான நேற்று ஆசிரியர் மணிவண்ணன் தனது காரை வேலுமணியின் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று பகல் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது, வேலுமணியின் 9 வயது மகன் முகுந்த், ஆசிரியரின் காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவுகள் மூடிக்கொண்டதால், சிறுவனால் கதவை திறந்து வெளியே வர முடியவில்லை. நீண்ட நேரம் காருக்குள் சிக்கியிருந்ததால், கடும் வெப்பம் மற்றும் காற்றோட்டமின்மை காரணமாக சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாக தெரிகிறது.
விளையாட சென்ற முகுந்த் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி வந்திருக்கின்றனர். இதற்கிடையே, வெளியே சென்றிருந்த ஆசிரியர் மணிவண்ணன் மீண்டும் வந்து கடைக்கு செல்வதற்காக காரை திறந்து பார்த்தபோது, சிறுவன் பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு, சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காருக்குள் விளையாடச் சென்ற 9 வயது சிறுவன், எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெத்திக்குட்டை பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.