செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூரில் பிரபல தனியார் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டம் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தவர் அதே பகுதியை சேர்ந்த நோவா என்ற மாணவர். சில மாதங்களுக்கு முன்பு இவரது தந்தைக்கு உடலநல குறைபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே நோவாவால் தனது கல்லூரியின் தேர்வு கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாத நிலையில் கல்லூரி நிர்வாகம் முழு கட்டணத்தையும் கட்டினால் மட்டுமே தேர்வு அனுமதிக்க முடியும் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
மாணவன் தனது சூழ்நிலையை எடுத்து கூறியும் கல்லூரி நிர்வாக மாணவனை தேர்வு எழுத்து அனுமதிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் அவரது தந்தைக்கு உடல்நிலை முன்பை விட மோசமான நிலையில் தனது படிப்பை கைவிட்டு அதிலிருந்து வரும் பணத்தை சிகிச்சை செலவுக்கு கொடுக்கலாம் என நினைத்துள்ளார் நோவா. எனவே கல்லூரியின் விடுதி மற்றும் கல்லூரிக்கு செலுத்திய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முறையாக கடிதம் எழுதி தர வேண்டும் என்றும் கூறிய நிலையில் கல்லூரி முதல்வருக்கு முறையான கடிதத்தை எழுதி தான் செலுத்திய கட்டணத்தை திருப்பி தர கோரியுள்ளார்.
ஆனால் முதல்வர் அந்த கடிதத்தில் கையெழுத்திடாமல் மாணவனை அலைக்கழித்ததாக சொல்லப்படுகிறது. தனத்தையின் உடல்நிலை மற்றும் தனது படிப்பை பற்றி கவலையில் இருந்த நோவாவிற்கு இந்த சம்பவம் மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. விடுதியில் தங்கி இருந்த நோவா நேற்று மாலை மற்ற மாணவர்கள் விடுதியில் இல்லாத நேரத்தில் தனது அறையின் மின்விசிறியில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் விடுதிக்கு வந்து நோவாவின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி வாயிலில் குவிந்தததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல்துறையினர் உயிரிழந்த மாணவன் நோவாவின் உடலை கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவன் தற்கொலைக்கான காரணத்தை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.