தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன், இவரது மனைவி அம்பிகா கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் மாவட்ட நீதிமன்ற வழக்கு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு விசாரணைக்கு சென்றுள்ளார், பிறகு காவல் நிலைய வேலைகளை முடித்து விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக கம்பம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள, அரசமரம் பூக்கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சுமார் 55 வயதுடைய ஒருவர், அம்பிகாவை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை வைத்து காவல் சீருடையில் இருந்த அம்பிகாவை வெட்ட முயற்சித்துள்ளார், அப்போது அருவா அவரது இடது கண்ணிற்கு கீழ் பட்டு ரத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அம்பிகாவை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதனை அடுத்து பெண் காவலரை அருவாளால் தாக்கிய முதியவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கூடலூர் பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பதும், குபேந்திரனுக்கும் காவலர் அம்பிகா குடும்பத்தினருக்கும் பாதை பிரச்சனை இருந்து வந்துள்ளதாகவும்.
இதனால் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு, அரிவாளால் பெண் காவலரை கொலை செய்யும் நோக்கத்தில் வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் காவலருக்கு ஆறுதல் கூறிவிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் பெண் காவலர் அம்பிகாவின் கண்ணிற்கு செல்லும் முக்கிய நரம்பு பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் கண் முன்னே சீருடை அணிந்திருந்த பெண் காவலரை வெட்டிய சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்