மாவட்டம்

கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க் அருகில் கவிழ்ந்த டிப்பர் லாரி...

அனல் மின் நிலையத்திற்கு கற்கள் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க் முன்பு கவிழ்ந்தது.

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி | திருச்செந்தூர் அருகே உடன்குடியில் சுமார் பத்து ஆயிரம் கோடி மதிப்பில் 660 மெகாவாட் இரண்டு அலகுகள் கொண்ட  அனல் மின் நிலையம் அமைக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த அனல் மின் நிலையம் கட்டுமான பணிகளுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் தினமும் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் மூலம் கற்கள் கொண்டுவரப்படுகிறது.

இந்த நிலையில் கூடங்குளத்திலிருந்து அனல் மின் நிலையத்திற்கு டிப்பர் லாரி மூலம்  ராட்சத பாறை கற்களை கொண்டுவரப்படுகிறது. இதில் பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்து (43). என்பவர் டிப்பர் லாரியை ஓட்டி வந்தார்.

அனல் மின் நிலையம் அருகே வந்த போது அதிவேகமாக வந்த இந்த டிப்பர் லாரியானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது பக்கம் உள்ள பெட்ரோல் பங்க் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த ராட்சத பாறைக்கற்கள் சாலையில் விழுந்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து குலசேகரன் பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.