மாவட்டம்

“தீயில் உடல் கருகி உயிரிழந்த இருவர்” - வெளியில் தாழிடப்பட்டு இருந்த கதவு … இரவோடு இரவாக எரிந்த குடிசை விலகுமா மர்மம்!

குறிப்பாக, அப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்களுடன்...

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை மாவட்டம், பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சக்திவேல். இவர் தனிநபருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்துள்ளார். அவருக்கு தமிழரசி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ள நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மனைவி மற்றும் மகன்கள் சக்திவேலை பிரிந்து திருப்பூர் பகுதியில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சக்திவேல் முன்னதாக கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தற்பொழுது திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்களுடன் சக்திவேல் நெருங்கிய பழக்கத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, ஜவ்வாது மலை அடிவார பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய அமிர்தம் என்பவருடன், சக்திவேல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்யாமல் கணவன்–மனைவியாக இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. அமிர்தத்திற்கும் ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், அவரது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டு அமிர்தத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சக்திவேல் தனது குத்தகை விவசாய நிலத்தில் சிமெண்ட் கல்லால் வீடு கட்டி, மேலே கூரை பரப்பப்பட்ட குடிசை வீட்டில் அமிர்தத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு, சக்திவேல் மற்றும் அமிர்தம் இருவரும் குடிசை வீட்டிற்குள் இருந்த நிலையில், குடிசை திடீரென தீப்பற்றி முழுவதுமாக எரிந்து சாம்பலாகி இருக்கிறது. இதில் குடிசை வீட்டின் வெளிப்புற கதவு தாழிட்ட நிலையில் இருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தில் இருவரின் உடல்களும் உள்ளே முழுவதுமாக கருகி சாம்பலான நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

அதிகாலை கறவை மாட்டில் பால் கறக்க சென்ற நபர், குடிசை எரிந்து சாம்பலாகி இருப்பதையும், உள்ளே இரண்டு உடல்கள் கருகிய நிலையில் இருப்பதையும் பார்த்து அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் காவல் துறையினர், சம்பவ இடத்தை சுற்றி வளைத்து ஆய்வு மேற்கொண்டனர். சக்திவேலின் அரசியல் பின்னணி, ரியல் எஸ்டேட் தொடர்புகள், முன் விரோதங்கள், யாரிடமாவது நிலம், பணம் அல்லது தனிப்பட்ட தகராறு இருந்ததா, கடைசியாக யாருடன் கைபேசியில் பேசினார் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.