

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூர் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ப்ரீ கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1500 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் கடந்தாண்டு இப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்காக கல்லூரியில் பயின்று வரும் 17 வயதுடைய மாணவிக்கு தொடர்ந்து இரண்டு எண்களில் இருந்து ஆபாச மெசேஜ் வந்திருக்கிறது.
மாணவி படித்த பள்ளியில் தற்போது ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பேளூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜெகதீசன் மற்றும் 41 வயதுடைய தினகரன் ஆகிய இருவரும் பள்ளியில் இருந்த மாணவியின் செல்போன் எண்ணை எடுத்து தொடர்ந்து வாட்ஸ் அப்பில் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்திருக்கின்றனர். மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் மாணவியை இரவு நேரங்களில் வீடியோ கால் செய்ய கூறி மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை வெளியே சொன்னால் பிரச்சனை வந்து விடுமோ என பயந்த மாணவி இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் இரவு நேரங்களில் வீடியோ கால் செய்ய சொல்லி டார்ச்சர் கொடுத்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களின் தொல்லை தாங்க முடியாத மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேரடியாக மாணவியுடன் சென்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வாழப்பாடி மகளிர் காவல் நிலைய போலீசார் பள்ளியில் இருந்து தினகரன் மற்றும் ஜெகதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. எனவே இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.