Vellore Peranampattu Poultry Farm Fire 
மாவட்டம்

“ஒரே நொடியில் கருகிய 2,500 கோழிகள்” - பண்ணையில் ஏற்பட்ட மின்கசிவு.. மளமளவென பரவிய தீயால் சோகம்!

அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்...

Mahalakshmi Somasundaram

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம்(செப் 19) இரவு அவரது கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பலமனேரில் உள்ள தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 2,500 கோழிக்குஞ்சுகளை ஜெகதீசன் வாங்கி வரவழைத்ததாக கூறப்படுகிறது. அவை கோட்டையூரில் உள்ள அவரது கோழிப்பண்ணையில் இறக்கி வைக்கப்பட்டிருந்தன.

கோழிக்குஞ்சுகள் பண்ணையில் இறக்கி வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராத விதமாக திடீரென மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, பண்ணை முழுவதும் தீ மளமளவென பரவியுள்ளது. தீ வேகமாக பரவியதால் பண்ணைக்குள் இருந்த சுமார் 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் சிக்கி உயிரிழந்தன. அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், புதிதாக ஆந்திராவில் இருந்து வாங்கி வரப்பட்ட கோழிக்குஞ்சுகளை தீயில் இருந்து மீட்க முடியவில்லை. இதில் சுமார் 2,500 குஞ்சுகள் உயிரிழந்துள்ளதால், குஞ்சுகளுக்கான கொள்முதல் செலவில் மட்டும் தோராயமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டடுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, கோழிப்பண்ணை கட்டிடம், மின் சாதனங்கள், கூண்டுகள், உபகரணங்கள் என மொத்தம் சேதமடைந்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கோழிப்பண்ணையில் பயன்படுத்தப்பட்ட மின் வயர்கள், இணைப்புகள், மின்சாதனங்கள் மற்றும் மின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். கோழிப்பண்ணைகளில் மின் சாதனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால், குறிப்பிட்ட கால இடைவெளியில் மின் வயர்கள் மற்றும் இணைப்புகளை நிபுணர்களைக் கொண்டு பரிசோதிப்பது அவசியம். என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vellore Peranampattu Poultry Farm Fire

பழைய அல்லது சேதமடைந்த வயர்களை உடனடியாக மாற்றுவதுடன், அதிக மின்சுமை ஏற்படாத வகையில் மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். இந்த தீ விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதா, பண்ணையில் மின் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருந்ததா, தீ விபத்தால் ஏற்பட்ட மொத்த சேதம் எவ்வளவு என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்