“தொழிலதிபர்களுக்கு விருந்தாகப்பட்ட சிறுமிகள்” - வீரமணி வழக்கில் அடுத்தடுத்த திருப்பம்.. போயஸ் கார்டன் பங்களாவில் நடந்தது என்ன?

மேலாளராக பணியாற்றிய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரசிம்மன் ஆகியோர் மூலமாக சிறுமிகளை அழைத்து வந்த...
veeramani-pocso
veeramani-pocso
Published on
Updated on
2 min read

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணியிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை அடையாளம் காண முடியாததால், வழக்கை முடிப்பதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அந்த அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் மறுவிசாரணை நடத்தியதில், சம்பவத்தின்போது சிறுமியாக இருந்த பெண் அடையாளம் காணப்பட்டார். அவரது வாக்குமூலம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான வீரமணி, அவருக்கு உதவியதாகக் கூறப்படும் சாந்தி மற்றும் மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த (ஆக 29) ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். தற்போது போலீஸ் காவலில் உள்ள வீரமணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில், போயஸ் கார்டன் பகுதியில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா ஒன்றை எடுத்து, அங்கு தனது தொழில் கூட்டாளிகளுடன் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தனது நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரசிம்மன் ஆகியோர் மூலமாக சிறுமிகளை அழைத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குவதாகக் கூறி அறக்கட்டளை மற்றும் ஆசிரமங்கள் நடத்தப்பட்டதாகவும், அதன் மூலம் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் உள்ளிட்டோர் அணுகப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்கு ஆடைகள், செலவுக்குப் பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றை வழங்கியதுடன், அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி கல்விக்கான செலவுகளை வீரமணி ஏற்றுக்கொள்வார் எனக் கூறி, போயஸ் கார்டன் பங்களாவுக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அங்கு சிலருக்கு மதுபானம் வழங்கி, வீரமணியுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்றதாகவும், வீரமணியின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளுக்காகவும் அந்த பங்களாவில் சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் அழைத்து வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் இந்த வலையமைப்பில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வீரமணி வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எண்ணிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் பணபரிவர்த்தனையை மட்டும் விசாரிக்க கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வீரமணியை கைது செய்யாமல் இருக்க பல கோடி பணம் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் வழக்கை விசாரிக்க விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் ஒரு புறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், பணபரிவர்த்தனை விவரங்களை விசாரிக்கும் குழி யார் யாருக்கு பணம் சென்றது, காவல் அதிகாரிகளுக்கு சென்றதா உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com