விழுப்புரம் மாவட்டம், பனையபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் 26 வயதுடைய சுந்தர். இவர் படித்து முடித்துவிட்டு பெரம்பலூர் அடுத்த விஜய கோபாலபுரத்தில் இயங்கி வரும் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் ஆப்பரேட்டராக கடந்த ஆறு ஆண்டுகளாக நிரந்தர பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சுந்தர் தன்னோடு வேலை பார்த்து வரும் விஜயகுமார், பிரதீப், யோகேஷ் ஆகியவர்களோடு பெரம்பலூர் உள்ள மின் நகர் என்னும் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
யோகேஷ் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் வேலை பார்க்கும் இடத்தில் தீபாவளிக்கு விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தீபாவளி முடிந்தும் திரும்பி வராத நிலையில், சுந்தர் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் மட்டும் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தனர். கடந்த (அக் 23) தேதி சுந்தர் காலை வேலைக்கு சென்று வந்த நிலையில் விஜயகுமாருக்கு இரவு வேலை என்பதால் இருவரும் இரவு ஒன்றாக அமர்ந்து உணவருந்திவிட்டு விஜகுமார் வேலைக்கு கிளம்பி சென்றிருக்கிறார்.
மறுநாள் காலை வேலையை முடித்துவிட்டு விஜயகுமார் அறைக்கு வந்து பார்த்த போது அறையில் சுந்தர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமார் தொடர்ந்து பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் சுந்தரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட சுந்தருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் காதல் தோல்வி சோக பாடல் ஒன்றை உருக்கமாக வைத்திருந்ததாக அவரோடு வேலை பார்ப்பவர்கள் கூறுகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சில மாதங்களாக சுந்தர் ஒரு பெண்ணோடு பழகி வந்ததாகவும் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.