மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இன்று நான்காம் நாள் தேர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான இயற்பியல் (Physics) தேர்வு நடைபெற்றது. பொதுவாகவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் பாடமாக இயற்பியல் கருதப்பட்டாலும், இன்றைய தேர்வு மாணவர்களுக்கு நிம்மதியையே தந்துள்ளதாகத் தெரிகிறது.
இயற்பியல் தேர்வை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள், வினாத்தாள் எதிர்பார்த்ததை விட எளிதாகவும், சில பகுதிகளில் மிதமான கடினத்தன்மையுடனும் இருந்ததாகத் தெரிவித்தனர். ஆசிரியர்களின் கருத்துப்படி, வினாத்தாள் பாடத்திட்டத்தை முழுமையாக உள்ளடக்கியிருந்ததோடு, மாணவர்களின் புரிதலையும் தீர்வு காணும் திறனையும் சோதிக்கும் வகையில் சமச்சீராக வடிவமைக்கப்பட்டிருந்தது. நேர மேலாண்மை மற்றும் அடிப்படை விதிகளில் தெளிவு கொண்ட மாணவர்கள் இத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற முடியும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆண்டில் சுமார் 43 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதில் 10 ஆம் வகுப்பில் 25 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பில் 18.5 லட்சம் மாணவர்களும் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தேர்வு மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 17 அன்று தொடங்கிய இந்தத் தேர்வுகள், 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 10 அன்றும், 12 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 10 அன்றும் நிறைவடைய உள்ளன. காலை 10:30 மணிக்குத் தொடங்கும் தேர்வுக்கு, போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் 10 மணிக்கே மையத்திற்கு வர வேண்டும் என்று வாரியம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வாரியம் முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளது. அதன்படி, அனைத்து மாணவர்களும் பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் பொதுத்தேர்வில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள விரும்பினால், மே மாதம் நடைபெறும் இரண்டாவது தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் உள்ளிட்ட மூன்று பாடங்கள் வரை மீண்டும் எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இருப்பினும், முதல் பொதுத்தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் பங்கேற்காத மாணவர்கள், இரண்டாவது தேர்வை எழுதத் தகுதி பெறமாட்டார்கள். அவர்கள் 'கட்டாயத் திரும்புதல்' (Essential Repeat) பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பிரதானத் தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும். அதேபோல, முதல் தேர்வில் ஒன்றிரண்டு பாடங்களில் தோல்வியடைந்து 'கம்பார்ட்மெண்ட்' (Compartment) பெற்ற மாணவர்கள், இரண்டாவது தேர்வின் மூலம் அபாடங்களை எழுதித் தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதையும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. முதல் தேர்வில் தவறிய வாய்ப்புகளை மாணவர்கள் அதே கல்வி ஆண்டில் சரிசெய்து கொள்ள இந்த இரண்டு தேர்வு முறை ஒரு பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.