தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி ஆகியோரின் திருமண வாழ்க்கை கடந்த சில வருடங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினர், நீண்ட காலமாக தமிழ் திரையுலகின் பிரபல ஜோடிகளில் ஒருவராக பார்க்கப்பட்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.
ஆனால் கடந்த 2024 அக்டோபர் மாதத்தில், தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக ரவி மோகன் சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியது.
இதற்கிடையில், ரவி மோகன் மற்றும் பாடகியும் தெரபிஸ்டுமான கெனிஷா பிரான்சிஸ் ஆகியோருக்கு இடையே நெருக்கமான உறவு இருப்பதாக தகவல்கள் பரவின. இதுவே ரவி மோகன் – ஆர்த்தி பிரிவிற்கான முக்கிய காரணம் எனவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ரவி மோகன் நேரடியாக மறுத்து, “கெனிஷா என் நெருங்கிய நண்பர் மட்டுமே” என்று விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ரவி மோகனும் கெனிஷாவும் ஒன்றாக வருவதும் நெருக்கமாக இருப்பதன் காரணமாக இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது. குறிப்பாக, அவர்கள் இணைந்து கலந்து கொண்ட சில நிகழ்வுகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் ஆர்த்தியை குறித்து பதிவு செய்த கருத்துக்கு கெனிஷா அளித்த பதில் புதிய சர்ச்சையை கிளப்பியது. அந்த பதிலில் ஆர்த்தியை குறிக்கும் வகையில் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். “ஒரு பெண்ணை பொதுவெளியில் இவ்வாறு விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என ரசிகர்கள் கெனிஷாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், ஆர்த்திக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் சட்டரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெனிஷாவின் கருத்துகளால் மனஉளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி ஆர்த்தி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆர்த்தி ரவியை குறித்து அவதூறு கருத்துகள் பேசுவதற்கு கெனிஷாவுக்கு தடை விதித்துள்ளது. தற்போது இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், கெனிஷாவைச் சுற்றியுள்ள இந்த சர்ச்சை ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.