பொழுதுபோக்கு

மீண்டும் 'Luxury கார்' பரிசா? முதல் நாளிலேயே ₹125 கோடி வசூல் செய்த 'ஜெயிலர் 2’.. கலாநிதி மாறனின் அடுத்த சர்ப்ரைஸ்?

அனிருத், ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோருக்குச் சொகுசு கார்களை பரிசாக வழங்கினார்

Muthu Lakshmi

இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் முதல் பாகம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதே கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் “ஜெயிலர் 2” உருவாகியுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன் ‘ஜெயிலர் 2’ டிக்கெட் முன்பதிவில் மட்டுமே 70 கோடி ரூபாய் வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால் , ஹ்ரித்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ்குமார் மற்றும் SJ சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’ஜெயிலர் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள “ஜெயிலர் 2” முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.125.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வார இறுதியில் உலகளாவிய வசூல் ரூ.200 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் முதல் பாதியில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகளும், இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்-ஆக அமைந்துள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் படக்குழுவினர் மகிழ்ச்சியின் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பு, ‘ஜெயிலர்’ முதல் பாகம் உலக அளவில் வசூல் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோருக்குச் சொகுசு கார்களை பரிசாக வழங்கினார். தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் வேட்டையும் அடிக்கும் என தெரிகிறது. இந்நிலையில் படக்குழுவினர் மீண்டும் பரிசுகளைப் பெறலாம் என்ற பேச்சுகள் இணையத்தில் எழ தொடங்கியுள்ளது. பார்க்கலாம் படக்குழுவினருக்கு என்ன பரிசு காத்திருக்கிறது என்று.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.