Varshini Venkat Arrest Case 
பொழுதுபோக்கு

கிளாமரில் ரசிகர்களை சொக்க வைத்த நடிகை.. 26 வயது இளைஞரிடம் மெகா மோசடி.. யார் இந்த 'பிக்பாஸ்' வர்ஷினி?

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ மற்றும் ‘சொட்ட சொட்ட நனையுது’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

பணமோசடி மற்றும் மிரட்டல் தொடர்பான புகாரில் ‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி வெங்கட் சென்னையில் கைது செய்யப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறும்படம் எடுப்பதாகக் கூறி இளைஞரிடம் பணம் பெற்றதாகவும், பின்னர் பணத்தைத் திருப்பிக் கேட்க சென்றபோது அவரை தாக்கி, செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை வர்ஷினி வெங்கட், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ தமிழ் 8-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர். இதற்கு முன்பே சினிமா மற்றும் வெப் சீரிஸ் வாயிலாக ரசிகர்களிடம் அறிமுகமான இவர், தொடர்ந்து நடிப்புத் துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார். வர்ஷினி வெங்கட் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளதுடன், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ மற்றும் ‘சொட்ட சொட்ட நனையுது’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர, சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் கிளாமராக போட்டோக்களை பதிவிட்டு திரையுலகில் தனக்கென வாய்ப்புகளை உருவாக்க முயன்று வந்த நிலையில், தற்போது காவல் நிலைய புகார் மற்றும் கைது காரணமாக அவரது பெயர் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவலின்படி, வர்ஷினிக்கு நண்பராக அறிமுகமான ஆந்திராவை 26 வயது இளைஞரிடம், ‘குறும்படம் எடுக்கலாம்’ எனக் கூறி ரூ.5 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

Varshini Venkat Arrest Case

ஆனால், அந்தப் பணத்தை வைத்து குறும்படம் எடுக்கப்பட்டதற்கான தகவலோ, அந்த இளைஞர் படப்பிடிப்பு முயற்சியில் பங்கேற்றதற்கான தகவலோ இதுவரை வெளியாகவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருகட்டத்தில் தான் கொடுத்த பணம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்ட இளைஞர், பணத்தை திருப்பித் தருமாறு வர்ஷினியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தாமதப்படுத்தியதுடன், மேலும் பணம் கேட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த இளைஞரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு வர்ஷினி அழைத்ததாகவும், அங்கு சென்ற அவரை வர்ஷினியும் அவருடன் இருந்த சிலரும் சேர்ந்து தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞரிடம் இருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை பறிக்கப்பட்டதாகவும் அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் வர்ஷினி வெங்கட்டை தற்போது கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bigg boss 8 Varshini Venkat

இந்த விவகாரத்தில் அவருடன் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற நபர்களின் பங்கு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா, வெப் சீரிஸ் என தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த வர்ஷினி வெங்கட், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பரவலான கவனத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது பண மோசடி மற்றும் மிரட்டல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்