Deva Music Composer Funeral 
பொழுதுபோக்கு

“கானமின்றி உறங்கும் கானா ஜாம்பவான்” - இறுதிப் பயணத்தில் மலர் தூவி வழியனுப்பிய மக்கள்.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்!

கானா பாடல்கள் முதல் காதல் மெலடிகள் வரை பல்வேறு வகையான பாடல்களை வழங்கி, பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்...

Mahalakshmi Somasundaram

தமிழ் திரையுலகில் தனது இசையால் தனி முத்திரை பதித்த தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு, திரையுலகினர், அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல், சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் இன்று (அக் 18) அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த இசையமைப்பாளர் தேவாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள், மலர் தூவியும் மாலை அணிவித்தும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, சக்கரமல்லூர் பகுதியில் உள்ள அவரது சொந்த பண்ணை வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியது.

தேவாவின் இறுதிச் சடங்கை ஒட்டி, சக்கரமல்லூர் பகுதியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 250 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால், பழைய மாங்காடு முதல் சக்கரமல்லூர் வரையிலான பகுதிகளிலும் தடுப்புக் கம்பிகள் அமைத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் அரசு மரியாதையுடன், 72 குண்டுகள் முழங்க தேவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் அமைச்சர் காந்திராஜ், மாவட்ட ஆட்சியர், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். கானா பாடல்கள் முதல் காதல் மெலடிகள் வரை பல்வேறு வகையான பாடல்களை வழங்கி, பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தேவா. அவரது மறைவால் இசை உலகம் ஒரு தனித்துவமான கலைஞரை இழந்துள்ளது. 

இன்று அவர் மண்ணைவிட்டு மறைந்திருந்தாலும், அவரது மண்மணம் மாறாத குரலும் அவர் இசையமைத்த பாடல்களும்  ஒவ்வொரு ரசிகரின் நினைவிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். கானமின்றி உறங்கும் கான ஜாம்பவானின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டாலும், அவர் இசையில் விதைத்த உணர்வுகளும் மெட்டுகளும் காலம் கடந்தும் உயிருடன் இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.