

தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா இன்று சென்னையில் காலமானார். இன்று காலையில் உடல் நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இசையமைப்பாளர் தேவா, மாரடைப்பால் உயிரிழந்தார். 75 வயதாகும் அவரின் உயிர் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரிந்திருக்கிறது.
சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு குடும்பத்தினர், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் காலை முதல் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, சிவகுமார், சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜமோகன், தேனிசை தென்றல் தேவா நம்மை விட்டுவிட்டு மறைந்திருப்பது பெரும் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார். மக்களின் இசையாக ஒலித்த இசையமைப்பாளர் தேவா உடல் முழு அரசு மரியாதையோடு வேலூர் அருகில் இருக்கக்கூடிய ஆற்காட்டில் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். நாளை முழு அரசு மரியாதை உடன் தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
அவரை அடுத்து செய்தியர்களை சந்தித்த தேவாவின் மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தந்தையின் இறப்பு குறித்து பேசுகையில் கண்கலங்கி பேசினார். அதில் காலையில் நெஞ்சு படபடப்பாக இருப்பதாக தேவா கூறியதாகவும், அதன் பிறகு மருத்துவமனைக்கு அழைத்த சென்றதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அப்பாவின் இறுதிச்சடங்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள சக்கர மல்லூர் கிராமத்தில் நடைபெறும். நேரில் வந்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஸ்ரீகாந்த் தேவா, அரசு மரியாதை கொடுக்க உத்தரவு கொடுத்த முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். மேலும் நாளை சுமார் 12 மணி அளவில் சென்னையில் இருந்து மறந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலை ஆற்காட்டில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.