தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு, கதைத்தேர்வு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள அவர், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், ரசிகர்களுடனான தொடர்பையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கரா' (Kara) திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அவரது ரசிகர்களின் ஆதரவு எப்போதும் போல குறையவில்லை.
திரைப்படங்களைத் தாண்டி சமூகப் பணிகளிலும் கவனம் செலுத்தி வரும் தனுஷ், தனது ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் பல ஆண்டுகளாக ரத்ததான முகாம்கள், கல்வி உதவிகள், நலத்திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் அண்மையில் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்ததும் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், தற்போது தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்றம் புதிய கொடி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கொடி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய கொடியில், "எண்ணம் போல் வாழ்க்கை... எண்ணம் போல் தான் வாழ்க்கை" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொடியில், தனுஷின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதுடன், அதன் பின்னணியில் நட்சத்திர சின்னமும் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இயக்குநரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்கமால் "அரசியலுக்கு வருவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். என் மகன்கள் மட்டுமல்ல, என் பேரன்கள் கூட எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம். அதில் தவறு எதுவும் இல்லை" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக கோடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே "தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?", என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்தக் கொடி அறிமுகத்திற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த புதிய கொடியின் கீழ் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம்கள், கல்வி உதவித் திட்டங்கள், மருத்துவ உதவிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் பல்வேறு சமூக சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, புதிய கொடியின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.