Hayden Panettiere Death 
பொழுதுபோக்கு

வீட்டில் சுயநினைவின்றி கிடந்த பிரபல நடிகை.. 40 நிமிடம் போராடியும் காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? - வெளியான பதற வைக்கும் உண்மை

11 மாத குழந்தையாக இருந்தபோதே விளம்பரங்களில் நடித்த அவர், பின்னர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்...

Mahalakshmi Somasundaram

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை Hayden Panettiere. வயது 36. இவர் ‘Heroes’, ‘Nashville’, ‘Scream’ உள்ளிட்ட படைப்புகள் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இந்நிலையில், இவர் கடந்த மாதம் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெற்கு கரோலினாவின் Greenville நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர் சுயநினைவின்றி கிடந்த நிலையில் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ உதவி குழுவினர் சுமார் 40 நிமிடங்கள் CPR உள்ளிட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை.

அப்போது அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்தில் சந்தேகத்துக்குரிய சூழல் அல்லது வேறு ஒருவர் தாக்கியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அவரது மரணத்துக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Greenville County Coroner Mike Ellis வெளியிட்ட தகவலின்படி, பல மருந்துகள் உடலில் ஏற்படுத்திய நச்சுத்தன்மையே Hayden Panettiere-ன் மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக Fentanyl, அதன் ரசாயன துணைப்பொருளான 4-ANPP, Alprazolam, Methocarbamol மற்றும் Quetiapine ஆகியவை அவரது உடலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் திட்டமிட்ட ஒன்று அல்ல; accidental overdose என Coroner பதிவு செய்துள்ளார். உடற்கூறு பரிசோதனையிலும் மரணத்துக்கு காரணமாகும் வகையில் உடலில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதில் Alprazolam பொதுவாக பதற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து. Methocarbamol தசை வலிக்கான மருந்தாகவும், Quetiapine சில மனநல சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்துகள் எந்த சூழலில், எவ்வளவு அளவில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

சம்பவம் நடந்த நேரத்தில் ஹெய்டனின் நீண்டகால காதலரான Brian Hickerson மற்றும் அவரது சகோதரர் Zach Hickerson ஆகியோரும் அந்த வீட்டில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது; இது சிக்கலான வழக்கு என Hayden குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் Kasey Kitchen கூறியுள்ளார். Greenville போலீசாரும் விசாரணை முடிவடையவில்லை என தெரிவித்துள்ளனர்.

Hayden Panettiere குழந்தைப் பருவத்திலேயே நடிப்புலகில் அறிமுகமானவர். 11 மாத குழந்தையாக இருந்தபோதே விளம்பரங்களில் நடித்த அவர், பின்னர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். 2006-ல் வெளியான ‘Heroes’ தொடரில் சிறப்பு சக்தி கொண்ட cheerleader கதாபாத்திரம் அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் ‘Nashville’ தொடர் மற்றும் ‘Scream’ படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட தனது நினைவுக் குறிப்பிலும், மனஅழுத்தம், மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகளுடன் பல ஆண்டுகள் போராடியதாக Hayden வெளிப்படையாக எழுதியிருந்தார். அந்த சிக்கல்களிலிருந்து மீண்டு வர முயன்ற தனது வாழ்க்கைப் பயணத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.

36 வயதில் திடீரென முடிந்த Hayden Panettiere-ன் வாழ்க்கை, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள Coroner அறிக்கை அவரது மரணத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதற்கு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. இருப்பினும் போலீஸ் விசாரணை தொடர்ந்து வருவதால், மேலும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்