ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன.
குறிப்பாக, நானியின் ‘ஹை பட்ஜெட்’ படமான ‘பாரடைஸ்’ இந்தப் படத்துடன் வெளியானாலும், திரையரங்குகளை நிரப்பி வருகிறார் ஆதி.
கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ஆதியின் முதல் படமாக வெளியாகி, பெரும் வெற்றி பெற்றிருந்தது. சுயாதீன இசைக் கலைஞராக அவரது வாழ்க்கையின் அடிப்படையில் அந்தப் படம் உருவானது. ஹிப்ஹாப் தமிழா என்ற அடையாளத்துக்கு திரை அங்கீகாரம் கொடுத்த படமாகவும் அமைந்தது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘நட்பே துணை’ படத்தில் நடித்தார். அதுவும் வெற்றி பெற்றது.
அதன்பிறகு, 2020ஆம் ஆண்டு ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தை இயக்கி நடித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ‘அன்பறிவு’, ‘வீரன்’, ‘பிடி சார்’ என மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து வந்தார். மீண்டும் இயக்கிய ‘கடைசி உலகப் போர்’ படத்தை முழுமையாகத் தயாரிக்கவும் செய்தார்.
இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்த ஆதி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என மீண்டும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் அனைத்து துறைகளிலும் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் பெயருக்காகவே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
பொறியியல் கல்லூரி வாழ்க்கை, இளைஞர்களின் கனவு, ஏக்கம், காதல் தோல்வி, நட்பு என பல உணர்வுகளைப் பேசியது மீசைய முறுக்கு. அந்த நேரத்தில் டிரெண்ட் செட்டராக அமைந்தது. முதல் படத்திலேயே ஆதிக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகின.
மீசைய முறுக்கு 2ம் பாகமும் கனவைத் துரத்தும் இளைஞனின் கதையாகவே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கானா பின்னணியில் நெப்போடிசம் உள்ளிட்டவற்றை விமர்சிக்கும் காட்சிகள் உள்ளன.
இதில் சைத்ரா, கெடிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என 3 ஹீரோயின்களும், பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், ஹர்ஸத் கான் என ஏராளமான துணை நடிகர்களும் நடித்துள்ளனர்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் வந்த சூரியின் ‘மாண்டாட்டி’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதனுடன் வெளியான கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் தோல்வியடைந்தது.
இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘கர’, ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’, ‘டாக்ஸிக்’, ‘பாரடைஸ்’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை.
விஜய், யஷ், சிவகார்த்திகேயன், தனுஷ், நானி போன்ற நட்சதிரங்கள் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவான படங்கள் தோல்வி அடைந்துள்ளன. ஜனநாயகன் படம் ஏற்கெனவே இணையத்தில் வெளியானது ரசிகர்களின் திரையரங்க வருகையை பாதித்திருக்கிறது. மற்ற படங்களின் தோல்வி சொல்லும் செய்தி, அதிக பட்ஜெட் மற்றும் உச்ச நட்சதிரம் மட்டுமே வெற்றிக்கு போதுமானதில்லை என்பதுதான்.
முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைத்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் சூர்யாவின் ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படங்கள் வெற்றி பெற்றன. எதிரபாராத விதமாக மாண்டாடியில் சூரி ஜொலித்தார். அதன் பிறகு திரையரங்குக்கு ரசிகர்களை ஈர்ப்பதில் ஆதி வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, இளைஞர்கள் கொண்டாடிய ‘மீசைய முறுக்கு’ படத்தின் 2ஆம் பாகம் என்ற பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, ரசிகர்களை நிறைவடையவும் செய்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்