பொழுதுபோக்கு

லைகா நிறுவனத்தில்,... அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!

Malaimurasu Seithigal TV

லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறையின் சோதனை ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில்  நிறைவு பெற்றது. 

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வரும் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ‘கத்தி’,  ‘கோலமாவு கோகிலா’,  ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’,  ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் லைகா புரடொக்‌ஷன்ஸ். இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய அடையாறு, தியாகராய நகர், காரப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது  தியாகராய நகரில் உள்ள லைகா நிறுவனம், எம்.ஆர்.சி நகரில் உள்ள லைகா நிறுவன சிஇஓ தமிழ் குமரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. மேலும் அடையாறில் லைகா நிறுவன நிர்வாகி திவாகரன் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

மேலும், பல இடங்களில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வருவாய் ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.