thug life audio launch punithraj kumar and kamal 
பொழுதுபோக்கு

“திட்டமிட்ட அவமதிப்பு” - தக் லைஃப் படத்திற்கு புதுப் பிரச்சனை..! அப்படி என்ன பேசினார் கமல்..!

இந்தக் கருத்து விழாவில் இருந்தவர்கள் சிலரால் வரவேற்கப்பட்டாலும், அது விரைவில் கர்நாடகத்தில் கடும்அதிருப்தியை ஏற்படுத்தியது...

Saleth stephi graph

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் டிஆர், திரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் (Thug Life) படம் வருகிற ஜூன் 5, 2025 அன்று பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த மே 24, 2025 அன்று சென்னையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் பேசிய சிவராஜ்குமார் தான் கமலின் தீவிர ரசிகர் எனவும் அவருக்காகவே இந்த விழாவில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார். 

பின்னர் கமலுக்காக “ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது”  என்ற இளமை ஊஞ்சலாடுகிறது பட பாடலையும் சிவராஜ்குமார் பாடி தனது அன்பை வெளிப்படுத்தினார் இந்த நிலையில் விழாவில் பேசிய கமல்ஹாசன், “சிவராஜ்குமார் இங்க வந்திருக்கிறார். அவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால் தான் அவர் இங்க வந்திருக்காரு. அதனால் தான் நான் பேச்சை தொடங்கும்போது உயிரே உறவே தமிழே என்று பேசத் துவங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் அவரது மொழி. நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்று பேசியிருந்தார். 

தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்ததாக கமல் கூறியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தக் கருத்து விழாவில் இருந்தவர்கள் சிலரால் வரவேற்கப்பட்டாலும், அது விரைவில் கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

கன்னட ரக்ஷண வேதிகை உள்ளிட்ட பல பிரபல கன்னட அமைப்புகள் கமலின் பேச்சை கண்டித்து, அவரது திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கன்னட ரக்ஷண வேதிகை தலைவர் பிரவீன் ஷெட்டி கூறியதாவது, "தமிழ் கன்னடத்தைக் காட்டிலும் சிறந்தது, கன்னடம் தமிழுக்குப் பிறகு வந்தது என்று கமல் கூறுகிறார். உங்கள் திரைப்படங்கள் கர்நாடகத்தில் ஓட வேண்டும். ஆனால் எங்கள் மொழியை நீங்கள் அவமதிக்கிறீர்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் கமலின் பேச்சை “திட்டமிட்ட அவமதிப்பு” என்றும் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை குறைத்து பேசுவது ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில், கமல்ஹாசன், நீங்கள் கன்னடத்தில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் இன்று நீங்கள் நன்றி மறந்து கன்னடத்தை அவமதிக்கிறீர்கள். கமலின் இந்த பேச்சு 6.5 கோடி கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்