ரவி மோகனுடனான தனது நட்பைச் சுற்றி வரும் தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பாடகி கெனிஷா ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை வெளியிட்டார். தற்போது அந்த வீடியோவை தனது சமூக வலைதளபக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு, சமூக வலைதளம், இசை, ரவி மோகன் இதிலிருந்து விலகுவதாக கெனிஷா பதிவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, ரவி மோகனின் விவாகரத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளுக்கு கெனிஷாவே காரணம் என்று பல சமூக ஊடகப் பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தவறான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்ட பிறகும், இணையத்தில் விமர்சனங்கள் தொடர்ந்தன. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான கெனிஷா தனது சமீபத்திய வீடியோவில், தன்னை தனிப்பட்ட முறையில் அறியாமலேயே மக்கள் ஏன் தன்னைப்பற்றி எதிர்மறையாகப் பேசுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். அவரது இந்த உணர்ச்சிப்பூர்வமான பதில் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியது.
அந்த வீடியோவில், கெனிஷா தனது சிறு வயதிலிருந்தே சந்தித்த துயரங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருந்தார்.2013-ல் அவரின் தாயையும், 2017-ல் அவரின் தந்தையையும் இழந்ததாக அவர் அக்காணொளியில் கூறியிருந்தார். மேலும், தான் நான்காம் வகுப்பு படிக்கும்போது உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் அவர் வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய கெனிஷா, “எனக்கு சுமார் 18 அல்லது 19 வயதில் திருமணம் நடந்தது. அந்த வயதில், நான் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை,” என்று கூறினார். மேலும், திருமணமான அந்த நபருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறிய அவர், அவரின் துன்புறுத்தலால் தனது குழந்தை வயிற்றிலேயே இறந்த வலிநிறைந்த நிகழ்வை பகிர்ந்துகொண்டார். அந்த வலியிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் போராடியதாகவும் அவர் கூறினார். தனது அறிக்கையின் மூலம், இணையத்தில் ஒருவரைப் பற்றித் தீர்ப்பளிக்கும் முன், அவர்களின் கடந்த காலத்தைப் புரிந்து கொள்ளுமாறும் அவர் மக்களை வலியுறுத்தினார்.
சமூகவலைத்தளத்தின் மூலம் பரவிவந்த தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கெனிஷா, ரவி மோகனின் குடும்பப் பிரச்சினைகளுக்குத் தான் காரணம் என்பதை வன்மையாக மறுத்தார். ரவி மோகன் தனது சொந்த முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். “ரவி மோகன் ஒரு குழந்தை அல்ல. யாரிடம் பேச வேண்டும், தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார். இந்நிலையில் இது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது. இதனையடுத்து அந்த வீடியோவை தற்போது கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். 2 பாகங்களாக போடப்பட்ட அந்த வீடியோ தற்போது 'டெலீட்' செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு பதிவின் மூலம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான அறிக்கையில், தங்களது உறவைச் சுற்றி பல மாதங்களாக நிலவிய தீவிரமான கண்காணிப்பு, இணையதள விமர்சனங்களுக்குப் பிறகு, ரவி மோகனின் வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கெனிஷா வெளிப்படுத்தியுள்ளார். "நான் இந்தக் கதைக்குள் அன்புடன் நுழைந்தேன். மௌனத்துடன் வெளியேறுகிறேன்," என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். "பொதுமக்களுக்கு, சினிமாத் துறைக்கு, விமர்சகர்களுக்கு, அவரை நேசிப்பவர்கள், வெறுப்பவர்கள், அவரைப் பாதுகாப்பவர்கள், கேலி செய்பவர்கள், அல்லது அவரது வாழ்க்கைக்கு உரிமை கோருபவர்கள் என அனைவருக்கும் - அவர் இப்போது முற்றிலும் உங்களுடையவர்" என்று அறிவித்தார். இது அவரின் மனைவியை மறைமுகமாக தாக்குகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழச்செய்துள்ளது. கெனேஷா, சென்னையை விட்டு வெளியேறவும், இசை மற்றும் சிகிச்சை உள்ளிட்ட தனது தொழில்சார் முயற்சிகளிலிருந்து விலகவும் முடிவு செய்துள்ளதாகக் தற்போது கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.