தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஒரு முன்னணி இசையமைப்பாளர் மீது பின்னணி பாடகி ஒருவர் அடுக்கடுக்கான பாலியல் புகார்களைத் தெரிவித்து ஒரு நேர்காணலில் பேசியிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்த இசையமைப்பாளரின் பெயரை வெளிப்படையாகக் கூறாத அந்த பாடகி, அவரை 'மெட்ராஸின் எப்ஸ்டீன்' (Epstein of Madras) என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இந்த கசப்பான அனுபவங்கள் கொடுத்த மன உளைச்சலால் தான் தமிழ் திரையுலகை விட்டே விலகி ரிஷிகேஷ் சென்றுவிட்டதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதால், உண்மைகளை வெளியே சொல்ல முன்வந்துள்ளதாக அந்த பாடகி கூறியுள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இது தனக்கு மட்டும் நடந்த விஷயம் அல்ல என்றும், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுடன் பேசிய போது ஒரு குறிப்பிட்ட முறையான திட்டமிடலுடன் இந்த அத்துமீறல்கள் நடந்திருப்பது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் பாதுகாப்பானது என்று நம்பிய அந்த இசையமைப்பாளரின் ஸ்டுடியோவிலேயே இந்த பாலியல் அத்துமீறல்கள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த ஸ்டுடியோவில் இருக்கும் ஒரு அறை முழுவதும் சத்தமே வெளியே கேட்காத அளவிற்கு (Soundproof) வடிவமைக்கப்பட்டிருந்ததோடு, அதில் ரகசிய கேமராக்கள் உட்பட பல கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். தான் பயந்து கத்தினாலும் வெளியே யாருக்கும் கேட்காது என்பதை அந்த இசையமைப்பாளர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும், அங்கே நடப்பவற்றை ரகசியமாகப் பதிவு செய்து அதை வைத்துப் பின்னாளில் மிரட்டியதாகவும் பாடகி பகீர் புகாரைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பல பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய எப்ஸ்டீன் வழக்கை உதாரணம் காட்டிய அந்த பாடகி, இந்த இசையமைப்பாளர் அத்தகைய செயல்களில் ஒரு மன்னனாகச் செயல்படுவதாகச் சாடியுள்ளார். முதலில் மிகவும் நம்பிக்கைக்குரியவர் போலப் பழகி, பிறகு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைத் தன் வசப்படுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். குறிப்பாகத் தனித்து வாழும் பெண்களைக் குறிவைத்து, அவர்களிடம் பண உதவி பெற்று, அதைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து மெல்ல மெல்ல அவர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார் என்று அவர் விவரித்துள்ளார்.
இது மட்டுமன்றி, ஸ்டுடியோவிற்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கூட ரகசியமாக வீடியோ எடுப்பது அந்த இசையமைப்பாளருக்கு ஒரு பொழுதுபோக்கு போல மாறிவிட்டதாகப் பாடகி தெரிவித்துள்ளார். தான் பாதிக்கப்பட்ட பிறகு, அதே போன்ற பாதிப்புக்குள்ளான பல பெண்களிடமிருந்து தனக்கு குறுஞ்செய்திகள் வந்ததாகவும் அவர் அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்