mamitha baiju crush talk  
பொழுதுபோக்கு

தனது ‘Crush’ பற்றி பேசிய மமிதா பைஜூ… “நிறைய பேருடைய கனவுலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்!” - கஜினி பட நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி

இதற்கு முன்பு சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அது சில காரணங்களால் தடைப்பட்டு...

Mahalakshmi Somasundaram

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து தொடர்ந்து கவனம் பெற்றுவரும் இளம் நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ. குறிப்பாக, இன்றைய gen z இளம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி வரவேற்பை பெற்றுள்ள அவர், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கியுள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய மமிதா பைஜூ, தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸுக்கு நன்றி தெரிவித்ததுடன், இயக்குநர் வெங்கி அத்லூரியுடன் பணியாற்றி மகிழ்ச்சியான தருணமாக இருந்தது எனவும் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாகக் கூறினார். மேலும் சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், சூர்யாவிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும், திரைக்கு வெளியிலும் அவர் தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாகவும் தெரிவித்தார். 

இதற்கு முன்பு சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அது சில காரணங்களால் தடைப்பட்டு விட்டது என தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறிய மமிதா, சூர்யா மற்றும் சுனில் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஜாலியாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். 

அதேபோல், நடிகை ராதிகா சரத்குமார் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் ஒரு வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறிய அவர், ராதிகா அவர்களால் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளமுடியாமல் போனது சற்று வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளினி “உங்களின் சிறு வயது க்ரஷ் யார்” என்று கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, “நிறைய பேருடைய கனவுல தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். ‘கஜினி’ படத்திலிருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ்” எனக் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.