பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் சாட்டை துரைமுருகன் முன்வைத்துள்ள விமர்சனங்கள் வைரலாகி வருகிறது. விஜய்யின் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக இந்தப் படம் பார்க்கப்படும் நிலையில், ஆந்திராவில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' திரைப்படத்தை எடுத்து, அதில் கொஞ்சம் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா பருப்புகளைத் தூவி, அனிருத் என்கிற நெய்யை ஊற்றி நன்றாகக் கிண்டி, இயக்குனர் எச்.வினோத் ஒரு 'பைனாப்பிள் கேசரி'யாகத் தமிழர்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். இயக்குனர் வினோத் பொதுவாகப் புதிய கதைகளை யோசிக்கக்கூடியவர் என்றாலும், விஜய் தனக்கு ஒரு 'ஹீரோ மெட்டீரியல்' வேண்டும் என்று கேட்டதால், ஆந்திரா கதையை அப்படியே தமிழுக்கு ஏற்றவாறு பட்டி டிங்கரிங் பார்த்து மாற்றிக் கொடுத்திருக்கிறார் என்றார்.
இந்தப் படத்தின் ட்ரைலரை பார்க்கும்போதே இது 'பகவந்த் கேசரி' படத்தின் ஜெராக்ஸ் காப்பி என்பது தெளிவாகத் தெரிவதாகக் கூறிய அவர், ஜெராக்ஸ் எடுக்கும்போது ஒருவேளை அந்தப் பேப்பரில் அழுக்கு இருந்தால் கூட, அதையும் சேர்த்து அப்படியே அச்சுப் பிசகாமல் எடுப்பதைப் போல, அந்தப் படத்தை அப்படியே உரித்து வைத்திருக்கிறார்கள் என்றார். அந்தப் படத்தில் பாலகிருஷ்ணா எப்படி ஒரு பெண்ணை வளர்த்து, அவருக்குப் பயிற்சி கொடுத்து ராணுவத்திற்கு அனுப்புவாரோ, அதே கதையைத் தான் இங்கும் வைத்திருக்கிறார்கள். ஆந்திராவில் பாலகிருஷ்ணா என்றால், தமிழ்நாட்டில் விஜய் அவ்வளவுதான் வித்தியாசம் என்று அவர் கலாய்த்துள்ளார்.
படத்தில் விஜய் பேசும் அரசியல் வசனங்களையும் சாட்டை துரைமுருகன் விட்டுவைக்கவில்லை. "என்னை அசிங்கப்படுத்திடலாம்னு நினைச்சீங்கன்னா, நான் திரும்பிப் போற ஐடியாவே இல்ல, ஐ ஆம் கம்மிங்" என்று விஜய் பேசும் வசனத்தை வைத்துக் கொண்டு, நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை ஒப்பிட்டுப் பேசினார். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடக்கவிருக்கும் நிலையில், விஜய் நிஜத்தில் எங்கே வருகிறார்? கரூருக்கு வருகிறாரா? அல்லது மேல்பாதிக்கு வருகிறாரா? என்று கேள்வி எழுப்பினார். உண்மையில் பனையூரில் உள்ள வீட்டில் உட்கார்ந்து கொண்டு, சினிமாவில் மட்டும் தான் "ஐ ஆம் கம்மிங்" என்று அவர் டயலாக் விடுகிறார் என்று சாடினார். நிஜத்தில் செய்ய முடியாததைச் சினிமாவில் செய்து காட்டி, அதன் மூலம் அரசியல் லாபம் தேட நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், படத்தில் வரும் குறியீடுகள் குறித்தும் அவர் விமர்சித்தார். இரண்டு யானைகளுக்கு நடுவே விஜய் நடந்து வருவது போன்ற காட்சி ட்ரைலரில் உள்ளது. நிஜத்தில் காட்டில் இரண்டு யானைகளுக்கு நடுவே போனால் மிதித்துத் துவம்சம் செய்துவிடும், நமக்குச் சாணி தான் மிஞ்சும். ஆனால் படத்தில் அதைக் குறியீடாக வைத்திருக்கிறார்கள் என்று கிண்டலடித்தார். அதேபோல ஐந்து சிலைகள் இருக்கும் இடத்தில் விஜய் நடந்து வருவது, பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய ஐந்து கொள்கைத் தலைவர்களைக் குறிப்பதாகவும், அவர்களை வைத்து அரசியல் செய்யத் துடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், இதெல்லாம் வெறும் சினிமா மாயை என்றும், நிஜத்தில் சிபிஐ விசாரணை என்ற 'ராடு' காத்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் எச்சரித்தார்.
குறிப்பாக, 'ஜனநாயகன்' என்ற பெயரில் படம் எடுத்துவிட்டு, டிக்கெட் விற்பனையில் அராஜகம் நடப்பதாகவும் கூறிய சாட்டை, 180 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளை ரசிகர் மன்ற நிர்வாகிகள் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, வெளியே 750 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டினார். இதுதான் விஜய்யின் ஜனநாயகமா? இப்படிப் பொதுமக்களிடம் கொள்ளையடித்துவிட்டு, ஊழலை ஒழிப்பேன், லஞ்சத்தை ஒழிப்பேன் என்று சினிமாவில் வசனம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று அவர் கூறினார். மொத்தத்தில், இந்தப் படம் விஜய்யின் அரசியல் ஆசைக்காக அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு சுமார் ரகமான ரீமேக் படம் என்றும், இதை நம்பிப் போகும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றும் அவர் தனது பாணியில் விமர்சித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.