சமூகவலைத்தளத்தில் ராப் இசையின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, இளைஞர்களின் வரவேற்பை பெற்று வைரலான ராப் பாடகர் வேடன், கேரளாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நவமி லதாவை கரம்பிடித்தார். இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் ரிஜிஸ்டர் ஆபிசில் நடந்துள்ளது. சினிமா பாணி கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல், பதிவுத் திருமணம் என்று அவர் எடுத்த முடிவு தற்போது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் தன்னுடைய ராப் பாடல்கள் மூலம் கவனம் பெற்ற வேடன், குறுகிய காலத்திலேயே பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி, ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும் தனது வரிகளில் பதிவு செய்து மக்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றார். மேடை நிகழ்ச்சிகள், வெளிநாட்டு இசைக் கச்சேரிகள், திரைப்பட பாடல்கள் என அவரது இசைப் பயணம் தொடர்ந்து வந்தது. திரைப்பட உலகிலும் அவரது குரல் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு வைரல் ஹிட் பாடல் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்த அவர், அதன் பின்னர் பல படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகளை பெற்றார். குறிப்பாக சமூக பின்னணியுடன் உருவான படங்களில் அவரது குரல் பயன்படுத்தப்பட்டதன் மூலம், அவருடைய இசை ஒரு கலை வடிவத்தைத் தாண்டி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் திரைபடத்தில் வேடன் பாடிய ரெக்க ரெக்க பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குத்தந்திரம் பாடல் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில், எழுத்தாளர் நவமிலதாவை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துள்ள வேடன், கலை மற்றும் சிந்தனை ஒருங்கிணைந்த உறவை உருவாக்கியுள்ளார் என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருமண பதிவில் சாட்சிகளாக கையெழுத்திட்டவர்களாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இருந்தது, இந்த இணைப்பின் சிந்தனை சார்ந்த தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.
இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், வேடனின் பிரபலமான "Mona Lova" பாடல் நவமிலதாவிற்காக எழுதப்பட்டதாம். இவர்களின் இந்த எளிமையான திருமணம், இளம் தலைமுறைக்கு திருமண விழாவின் மீதான பிம்பத்தை மாற்றி, ஒரு கருத்து கொண்ட இணைவு என்றும் தெரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள்சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.