Winston Duke Rashmika Winston Duke Rashmika
பொழுதுபோக்கு

ஜப்பானில் நடைபெற்ற அனிமே விருதுகள் விழாவில் ஜொலித்த ராஷ்மிகா! 'பிளாக் பேந்தர்' பிரபலம் வின்ஸ்டன் டியூக்குடன் இணைந்து பங்கேற்பு!

10வது வருடாந்திர க்ரஞ்சிரோல் அனிமே விருதுகள் விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் ஹாலிவுட் நடிகர் வின்ஸ்டன் டியூக் இணைந்து ஒன்றாக மேடையை பகிர்ந்து கொண்டனர்.

Vinvizhi Leninton

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள கிராண்ட் பிரின்ஸ் ஹோட்டல் டகனாவாவில் மே 23, 2026 அன்று நடைபெற்ற 10வது வருடாந்திர 'க்ரஞ்சிரோல் அனிமே விருதுகள்' வழங்கும் விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் ஹாலிவுட் நடிகர் வின்ஸ்டன் டியூக் இணைந்து ஒன்றாக மேடையை பகிர்ந்து கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள அனிமே ரசிகர்களிடமிருந்து சாதனை அளவிலான 73 மில்லியன் வாக்குகள் இந்த ஆண்டினுடைய விருதுகளுக்காக பதிவாகியிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு, வின்ஸ்டன் டியூக் தனது சமூக வலைதளங்களில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். “இது எனது முதல் ஜப்பான் பயணம். அற்புதமான கலாச்சாரத்தையும், சிறந்த மனிதர்களையும் சந்தித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஈடு இணையற்ற ராஷ்மிகா மந்தனாவுடன் இந்த தருணத்தை பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி அளித்தது,” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

அறிக்கைகளின் படி, விழாவின் நிகழ்ச்சி தொகுப்பு பகுதியில் ராஷ்மிகாவுடன் இணைந்து மேடையேற வேண்டும் என்று வின்ஸ்டன் டியூக் அமைப்பாளர்களிடம் குறிப்பாகக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விருது விழாவில் தி வீக்கெண்ட், கே-பாப் கலைஞர்களான பாம் பாம் மற்றும் டென், கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ராப் பாடகர் யங் மிக்கோ உள்ளிட்ட பல சர்வதேச நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

வின்ஸ்டன் டியூக், மார்வெல் தயாரிப்பான ‘பிளாக் பேந்தர்’ திரைப்படத்தில் எம்’பாகு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். தொடர்ந்து ‘அஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். டொபாகோவில் பிறந்த அவர், பின்னர் நியூயார்க்கில் குடியேறி நாடகம் மற்றும் தொலைக்காட்சி துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

ராஷ்மிகா மந்தன்னா தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ‘அனிமல்’, ‘புஷ்பா 2: தி ரூல்’, ‘சாவா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, ‘புஷ்பா 3’ மற்றும் ‘அனிமல் பார்க்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், ‘காக்டெய்ல் 2 திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருது வழங்கும் விழாவின் பத்தாவது பதிப்பில், கடந்த ஆண்டு 51 மில்லியனாக இருந்த வாக்கு எண்ணிக்கையை விட, இந்த ஆண்டு 73 மில்லியன் அனிமே ரசிகர்கள் விருதுகளுக்காக வாக்களித்து தங்கள் பதிவுகளைப் பதிவு செய்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.